சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் எஸ்.எஸ்.பத்ரிநாத்தின் வாழ்க்கை குறிப்பு
சென்னையில் உள்ள பிரபல கண் மருத்துமனையான சங்கர நேத்ராலயாவின் நிறுவனரான எஸ்.எஸ்.பத்ரிநாத் இன்று காலை காலமானார். இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு மருத்துவமனைகளில் ஒன்றான சங்கர நேத்ராலயாவை 1978 இல் சென்னையில் நிறுவினார். தற்போது உலகெங்கும் இருந்து பலரும், இந்த கண் மருத்துவமனையில் வழங்கப்படும் உயர்தர சிகிச்சையை நாடி வருகின்றனர். குறைந்த விலையில், உயர்தர சிகிச்சை அளிக்கும் இந்த மருத்துவமனையின் தூணான பத்ரிநாத்தின் வாழ்க்கையை பற்றி ஒரு சிறு குறிப்பு.
பத்ரிநாத்தின் வாழ்க்கை பயணம்
செங்கமேடு சீனிவாச பத்ரிநாத், என்கிற SS பத்ரிநாத், சென்னையில் பிறந்தவர். சிறு வயதிலேயே பெற்றோர் இருவரையும் இழந்த பத்ரிநாத், பெற்றோரின் காப்பீட்டுத் தொகையை கொண்டு தனது மருத்துவ படிப்பை தொடர்ந்தார். அவர் நியூயார்க்கில் மேற்படிப்பை முடித்து தனது டாக்டர் பணியினை தொடர்ந்தார். அங்குள்ள , பல கண் மருத்துவ மையங்களில் பயிற்சி பெற்ற இவர், 1978ஆம் ஆண்டில், தான் பிறந்த ஊரில், ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் இலாப நோக்கற்ற கண் மருத்துவமனையை துவக்க முடிவெடுத்தார். அதன் வித்தே இந்த புகழ்பெற்ற சங்கர நேத்ராலயா நிறுவனம்.
இலவசமாக நடைபெறும் தினசரி 100 அறுவை சிகிச்சைகள்
சங்கர நேத்ராலயாவில், தினந்தோறும் கிட்டட்டத்தட்ட, 1200 நோயாளிகளுக்கும் மேல், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதோடு, தினமும் 100 அறுவை சிகிச்சைகள் இலவசமாக செய்கிறார்கள். இந்த மருத்துவமனையில் ஒருங்கிணைந்த ஐ இன்ஸ்டிட்யூட்டில், வளர்ந்து வரும் கண் மருத்துவர்களுக்கான பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. இத்தகைய பெருமை மிகு நிறுவனத்தை ஸ்தாபித்த டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத், மத்திய அரசின் பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார்.