நண்பனின் மகளை பலமுறை பலாத்காரம் செய்த அரசு அதிகாரி: யாரிந்த பிரேமோதய் காக்கா?
மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரேமோதய் காக்கா, டெல்லியின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் இணை இயக்குனராக பணி புரிந்து வருகிறார். அவரது லிங்க்ட்இன் சுயவிவரத்தின்படி, சிறார் நீதி(JJ) மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் ஆகியவற்றைச் செயல்படுத்துவதற்கான நோடல் அதிகாரியாக காக்கா பணியாற்றி வந்தார். அவர் குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு விதிகளுக்கான வரைவுக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.
பிரேமோதய் காக்கா இன்று கைது செய்யப்பட்டார்
பிரேமோதய் காக்கா, தனது நண்பரின் 14 வயது மகளை பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து, அந்த சிறுமியை கருவுற செய்ததற்காக இன்று கைது செய்யப்பட்டார். இந்த கைது குறித்து தகவல் அளித்த வடக்கு மாவட்ட காவல்துறை துணை ஆணையர் (டிசிபி) சாகர் சிங் கல்சி, குற்றம் சாட்டப்பட்டவரை விசாரித்து வருவதாகவும், அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மற்ற சாட்சிகளையும் குற்றம் சாட்டப்பட்டவர்களையும் அடுத்து விசாரிப்போம் என்று அவர் மேலும் கூறினார்.
சிறுமிக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை வலுக்கட்டாயமாக ஊட்டிய காக்காவின் மனைவி
2020ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை இறந்துவிட்டதால், அந்த சிறுமி தன் தந்தையின் நண்பரான காக்காவின் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பிரேமோதய் காக்கா நவம்பர் 2020 முதல் ஜனவரி 2021 வரை பாதிக்கப்பட்ட சிறுமியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த பலாத்கார சம்பவங்களால் கர்ப்பமான 14 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை வலுக்கட்டாயமாக காக்காவின் மனைவி ஊட்டிவிட்டு, கர்பத்தை கலைக்க செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலம் இன்னும் மாஜிஸ்திரேட் முன் பதிவு செய்யப்படவில்லை. தற்போதைக்கு அந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உளவியல் கவுன்சிலிங்கால் வெளிச்சத்திற்கு வந்த இந்த கொடூர சம்பவம்
பல நாட்களாக இந்த சம்பவத்தை வெளியே சொல்லாத அந்த சிறுமி, மன அழுத்தத்திற்கு உள்ளாகி ஒரு வாரத்திற்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் உளவியல் கவுன்சிலிங் செய்த போது தான், 14 வயது சிறுமிக்கு நடந்த இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. சிறுமியின் பிரச்சனையை தெரிந்து கொண்ட உளவியல் மருத்துவர்கள் காவல்துறைக்கு உடனடியாக தகவல் அளித்தனர். குற்றம் சாட்டப்பட்ட அரசு அதிகாரிக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பி விசாரணையும் நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரேமோதய் காக்காவை சஸ்பெண்ட் செய்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
மேலும், குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவி மீது ஐபிசி பிரிவு 120-பி(குற்றச் சதி) இன் கீழ் குற்றத்தில் அவருக்கு உதவியதற்காக FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், குற்றம்சாட்டப்பட்ட அரசு அதிகாரியை சஸ்பெண்ட் செய்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பேசிய ஆம் ஆத்மி கட்சி தலைவர் சவுரப் பரத்வாஜ், "இது ஒரு கொடூரமான சம்பவம். இந்த சம்பவம் மனித குலத்தை அவமானப்படுத்தியுள்ளது" என்றார். டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மாலிவாலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தகுந்த தண்டனை வாங்கி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.