யார் இந்த நெவில் ராய் சிங்கம்? இந்தியாவில் ஆட்சி மாற்ற சதி புகாரில் சிக்கும் அமெரிக்கத் தொழிலதிபர்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை வீழ்த்த சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து ஆட்சி மாற்றத்திற்கு சதி செய்யப்படுவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்கத் தொழில்அதிபர் நெவில் ராய் சிங்கம், கிரிப்டோகரன்சி அமைப்புகள் மற்றும் சர்வதேசச் செயல்பாட்டாளர்களுக்கு இடையே தொடர்பு இருப்பதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த புகார் இந்திய அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பின்னணி
யார் இந்த நெவில் ராய் சிங்கம்?
அமெரிக்காவில் பிறந்த நெவில் ராய் சிங்கம், 1980-களின் இறுதியில் தாட்வொர்க்ஸ் (ThoughtWorks) என்ற மென்பொருள் நிறுவனத்தைத் தொடங்கினார்.
2017-இல் இந்த நிறுவனத்தை அபாக்ஸ் பார்ட்னர்ஸ் நிறுவனத்திற்கு $785 மில்லியனுக்கும் அதிகமான தொகைக்கு விற்பனை செய்துவிட்டு, சீனாவிலுள்ள ஷாங்காய் நகருக்குத் தனது இருப்பிடத்தை மாற்றினார்.
அங்கிருந்தபடி இடதுசாரி அரசியல் அமைப்புகள், ஊடகங்கள் மற்றும் சர்வதேச பிரச்சார அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கி வருவதாக இவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது.
வழக்கு
நியூஸ்கிளிக் வழக்கு மற்றும் சீன நிதியுதவி சர்ச்சைகள்
இந்தியாவில் நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக நிதி வழங்கி, சீன அரசிற்கு ஆதரவான செய்திகளையும், இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துகளையும் பரப்ப முயன்றதாக டெல்லி சிறப்புப் பிரிவு போலீஸார் நெவில் ராய் சிங்கம் மீது யுஏபிஏ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இருப்பினும், தான் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தரவின்படி செயல்படவில்லை என்றும், வழக்கமான தொண்டு நிறுவன நிதியுதவிகளையே வழங்கி வருவதாகவும் அவர் தொடர்ந்து கூறி மறுத்து வருகிறார்.
தீவிரமடையும் விசாரணை
சர்வதேச அளவில் தீவிரமடையும் விசாரணைகள்
நெவில் ராய் சிங்கம் இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா உட்பட பல நாடுகளின் பாதுகாப்பு அமைப்புகளின் கண்காணிப்பில் உள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றக் குழுக்கள் மற்றும் நீதித்துறை இவர் நிதியளிக்கும் தி பீப்பிள்ஸ் ஃபோரம் உள்ளிட்ட அமைப்புகளின் பணப் பரிவர்த்தனைகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.
உலகளவில் மக்கள் போராட்டங்களைத் தூண்டி அரசியல் சீர்குலைவை ஏற்படுத்த நிதியுதவி அளிக்கப்படுகிறதா என்ற கோணத்தில் அமெரிக்க மற்றும் இந்திய புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன.