இந்திய ஊடகத்துக்கு நிதியுதவி வழங்கும் சீனா; யார் அந்த நெவில் ராய் சிங்கம்?
நேற்று, ராகுல் காந்தி மீண்டும் எம்.பி. பதவியை பெற்றதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதும், காங்கிரஸ் தலைவர்கள் புடைசூழ ஆரவாரத்துடன் மீண்டும் மக்களவைக்குள் நுழைந்தார். அப்போது, பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே,"அரசுக்கு எதிரான கருத்துகளை பரப்பி அமைதியற்ற சூழலை உருவாக்க ஊடகங்கள் வெளிநாட்டிலிருந்து குறிப்பாக சீனா போன்ற நாடுகளிலிருந்து நிதியுதவியை பெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில், நியூஸ்கிளிக் ஊடகம் ரூ.38 கோடி நிதியை திரட்டியுள்ளது." எனக்கூறினார். இவர் கடந்த 5-ஆம் தேதி வெளியான நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியான தகவலின் அடிப்படையிலேயே இந்த கேள்வியை எழுப்பினார். அந்த செய்திப்படி, சீனாவுக்கு சாதகமாக செயல்பட இந்திய ஊடகத்துக்கு சீன தரப்பில் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
எங்கிருந்து பெறப்பட்ட பணம்?
மக்களவை உறுப்பினர் நிஷிகாந்த் துபே மேலும், "நியூஸ்கிளிக் ஊடகத்துக்கு எவ்வாறு நிதியுதவி கிடைத்தது, அதனால் பயனடைந்தவர்கள் யார் என்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும். 2005 மற்றும் 2014-க்கு இடையில் நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம் காங்கிரஸ் கட்சி சீனாவிடமிருந்து பணத்தை பெற்றுள்ளது. கடந்த 2008-ல் சோனியாவையும், ராகுலையும் அவர்கள் சந்திக்க அழைத்திருந்தனர். டோக்லாம் நெருக்கடியின்போது அவர்கள் சீனாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்" எனக்குற்றம் சாட்டினார். இதை தொடர்ந்து, அவையில் கூச்சல் குழப்பும் நிலவியது. எனினும் இது குறித்து, ராகுல் காந்தி பதில் எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான தகவல் என்ன என்பதை குறித்த சிறு குறிப்பு இதோ:
யார் அந்த நெவில் ராய் சிங்கம்?
கடந்த 2021-ம் ஆண்டு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஒரு தனியார் அமைப்பு, ஆசியா வம்சாவளிகளுக்கு எதிராக இனவெறி தாக்குதல் நடைபெறுவதாக கூறி, திடீர் போராட்டங்களை நடத்தி வன்முறையில் ஈடுபட்டது. இதே அமைப்பு, ஹாங்காங்கிலும் மக்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதுக்கு குறித்து, நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் நடத்திய புலனாய்வில், இந்த போராட்ட அமைப்பு, சீனாவின் பினாமி அமைப்பு என தெரியவந்துள்ளது. இந்த அமைப்புக்கு அமெரிக்காவை சேர்ந்த இலங்கை வம்சாவளி தொழிலதிபர் நெவில் ராய் சிங்கம் என்பவர் நிதியுதவி செய்து வருகிறார். இவர் சீன அரசின் தீவிர ஆதரவாளராகவும் அறியப்படுபவர்.
தாட்வோர்க்ஸ் நிறுவன தலைவர் நெவில் ராய் சிங்கம்
மே 13, 1954 இல் அமெரிக்காவில் பிறந்த நெவில் ராய் சிங்கத்தின் தந்தை, இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். அவர், புரூக்ளின் கல்லூரியில் அரசியல் அறிவியல் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். அதனால், சிறு வயது முதல், நெவில் ராய் அமெரிக்காவில் வளர்ந்துள்ளார். அமெரிக்காவின் சிகாகோ நகரை தலைமையிடமாகக் கொண்டு 'தாட்வோர்க்ஸ்' என்ற சாப்ட்வேர் நிறுவனத்தையும், பல்வேறு அறக்கட்டளைகளையும் சிங்கம் நடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி, அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மற்றும் மன்ஹாட்டன் பகுதியை சேர்ந்த நிறுவனங்கள், தென்னாப்பிரிக்காவில் ஓர் அரசியல் கட்சி,அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ஜாம்பியா, கானா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஊடகங்களுக்கு, நெவில் ராய் சிங்கம் நிதியுதவி வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
சீனாவின் பிரச்சாரத்துறையுடன் இணைந்த சிங்கம்?
தற்போது, சிங்கம், சீனாவின் ஷாங்காய் நகரில் முக்கிய அலுவலகங்கள் செயல்படும் டைம்ஸ் சதுக்கத்தின் 18வது மாடியில், தன்னுடைய அலுவலகத்தை நடத்தி வருவதாகவும், தனது தொடர்புகள் மூலமாக ஷாங்காய் நகரின் அரசாங்க பிரச்சாரத் துறையுடன் இணைந்து ஒரு யூட்யூப் நிகழ்ச்சியை தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்தியாவில் செயல்படும் 'நியூஸ்கிளிக்' என்ற ஊடகத்துக்கு அவரது சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது எனவும், இதன் காரணமாகவே, இந்த ஊடகம் சீனாவுக்கு ஆதரவான, சாதகமான செய்திகளை வெளியிட்டு வருகிறது எனவும் தற்போது நியூயார்க்-டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில், சீனாவுக்கு ஆதரவான செய்திகளை வெளியிட சிங்கம் தொடர்ந்து முயற்சிகளை செய்து வருகிறார். இதுதொடர்பாக தனது நிறுவனங்கள், நண்பர்கள் வாயிலாக அவர் காய்களை நகர்த்தி வருகிறார் எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.