பிரான்சின் புதிய பிரதமர் கேப்ரியல் அட்டல் பற்றி சில தகவல்கள்
பிரான்சின் பிரதம மந்திரி, எலிசபெத் போர்ன் பதவியை ராஜினாமா செய்த பின்னர், பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், அந்நாட்டின் கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டலை அடுத்த பிரதமராக நியமித்தார். இதன் மூலம் 34 வயதில் பிரதமர் பதவிக்கு தேர்வான இளம் தலைவராகிறார் கேப்ரியல் அட்டல். அதுமட்டுமின்றி, நாட்டின் பிரதமர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் நேர்பாலீர்ப்பாளரும் இவரே. முதல்முறையாக, வெளிப்படையான நேர்பாலீர்ப்பாளர் ஒரு அரசாங்கத்தின் தலைவராக ஆவது குறித்து மக்கள் பெருமிதம் கொண்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னதாக, எலிசபெத் போர்ன் இரண்டு வருடங்களுக்கும் குறைவான காலமே பதவியில் இருந்தார். ஆனால் அமைச்சரவை மறுசீரமைப்பிற்கு முன்னதாக அவர் ராஜினாமா செய்துவிட்டார்.
யார் இந்த புதிய பிரதமர் கேப்ரியல் அட்டல்?
கேப்ரியல் அட்டல், கோவிட் தொற்றுநோய்களின் போது அரசாங்க செய்தித் தொடர்பாளராக இருந்த இம்மானுவேல் மக்ரோனின் நெருங்கிய கூட்டாளி ஆவார். சமீபத்திய கருத்துக் கணிப்புகளில் நாட்டின் மிகவும் பிரபலமான அரசியல்வாதிகளில் ஒருவரான அவர், வானொலி நிகழ்ச்சிகளிலும் பாராளுமன்றத்திலும், எளிதாக அணுகக்கூடியவராகவும், ஒரு அறிவார்ந்த அமைச்சராகவும் தனக்கென பெயர் எடுத்தார். அவர் பிரான்சின் இளைய பிரதமராகவும், வெளிப்படையாக தன்பால் ஈர்ப்பாளராகவும் இருக்கும் தலைவர் என்று பிரான்ஸ் எம்பி பேட்ரிக் விக்னல் கூறினார்.