நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரத்தில் அடிபடும் பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா! யார் அவர்?
இன்று மதியம், தலைநகர் டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரின் போது, இரண்டு மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முற்பட்டனர். அதே நேரத்தில், நாடாளுமன்றத்தை சுற்றி அமைக்கப்பட்ட தடுப்புகளை உடைத்து, இரண்டு பெண்கள் உள்ளே நுழைய முயன்ற நிலையில் அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மேலும் அதிர்ச்சி தரும் விதமாக, நாடாளுமன்றத்திற்குள் நுழைய, கர்நாடக பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா அனுமதி அளித்த நுழைவுச் சீட்டை பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
யார் அந்த பிரதாப் சிம்ஹா?
கர்நாடகா மாநிலத்தில் உள்ள சக்லேஷ்பூரை பூர்விகமாக கொண்டவர் தான் பிரதாப் சிம்ஹா. சிறுவயது முதல் இந்துத்துவா கொள்கையால் ஈர்க்கப்பட்ட பிரதாப் சிம்ஹா, கல்லூரி படிப்பை முதித்ததும், வலதுசாரி நாளிதழான விஜய கர்நாடகா பத்திரிகையில் நிருபராக சேர்ந்தார். அந்த பத்திரிகையில் அவர் எழுதிய இந்துத்துவ சார்ந்த கட்டுரைகள் கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது மட்டுமின்றி, அவரை மாநிலம் முழுவதும் பிரபலப்படுத்தியது. அப்படித்தான், தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். படிப்படியாக கர்நாடகா பாஜக இளைஞர் அணி தலைவரானார். இதன் தொடர்ச்சியாக, நரேந்திர மோடியின் சுயசரிதையை எழுதினார் பிரதாப் சிம்ஹா. இதனால் மோடிக்கு நெருக்கமாகி, அதன் தொடர்ச்சியாகவே அவருக்கு MP சீட் தரப்பட்டது. அதன் பின்னர் அவர் தொடர்ச்சியாக மக்களவை உறுப்பினராக உள்ளார்.