கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா?
கொரோனா உலகில் பரவத் தொடங்கி கிட்டத்தட்ட 2 வருடங்கள் முடியப் போகிறது. இருந்தும், கொரோனா நோய் எப்படி பரவ ஆரம்பித்தது என்பது பெரும் புதிராக இருக்கிறது. இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின்(WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இது தொடர்பான தரவுகளை சீனா வெளியிட வேண்டும் என்று கூறினார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைக் கூறிக்கொண்டிருக்கும் வேளையில் உண்மையான காரணத்தை ஆராய்ந்து சீனா வெளியிட வேண்டும் என்று இவர் கேட்டுகொண்டார். மேலும் பேசிய WHO தலைவர், அடுத்த ஆண்டிற்குள் கோவிட்-19ஆல் அறிவிக்கப்பட்ட உலகளாவிய சுகாதார அவசரநிலை ஒரு முடிவுக்கு வரும் என்று தாங்கள் நம்புவதாகவும் தெரிவித்தார்.
கொரோனா எப்படி தோன்றியது?
சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய மூன்று ஆண்டுகளுக்குப் பின், இந்த SARS-CoV-2 என்னும் வைரஸ் மனிதர்களுக்கு பரவும் ஒரு சுவாச நோய்க் கிருமியாக எப்படி மாறியது? கொரோனா எப்படி தோன்றி இருக்காலம் என்பற்கு நிபுணர்கள் கூறும் இரண்டு முக்கிய அனுமானங்கள்: 1. இந்த வைரஸ் இயற்கையாக ஏற்படும் ஜூனோடிக் ஸ்பில்ஓவர்(zoonotic spillover) அதாவது மனிதர்கள் அல்லாத மிருகங்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் அல்லது 2. மனித ஆராய்ச்சிகளால் ஏற்பட்ட குளறுபிடிகளால் பரவ தொடங்கி இருக்கலாம். இது போன்ற பல அனுமானங்கள் இணையத்திலும் நிபுணர்கள் மத்தியிலும் உலா வந்து கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் எதிர்காலத்தில் முன்னெச்சரிக்கையோடு இருப்பதற்கும் கொரோனா எப்படி உருவானது என்பதைத் தெரிந்துகொள்வது மிக அவசியம்.