
காக்காத்தோப்பு பாலாஜி முதல் ஈரானிய கொள்ளையன் வரை: ஒரே வருடத்தில் 4 என்கவுண்டர்கள் நடத்திய சென்னை கமிஷனர் அருண்
செய்தி முன்னோட்டம்
சென்னையில் நேற்று அதிகாலை தொடர் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், கமிஷனர் அருணின் ஆலோசனை பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டு, மாலைக்குள் கொள்ளையர்கள் பிடிக்கப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை தொடர் செயின் பறிப்பு சம்பவங்களின் மூளையாக செயல்பட்ட கொள்ளையன் ஜாபர் குலாம் ஹூசைன் என்பவர் என்கவுண்டரில் சுட்டுகொல்லப்பட்டான்.
பதுக்கி வைத்த நகைகளை மீட்பதற்காக அழைத்துச் சென்ற போது, கொள்ளைக்காரன் தப்பி செல்ல முயற்சித்ததாகவும், அவன் நிறுத்தி வைத்திருந்த பைக்கில் மறைத்து வைத்திருந்த கை துப்பாக்கியால் போலீசாரை சுட முயற்சித்ததால் இந்த என்கவுண்டர் நடைபெற்றதாகவும் கமிஷனர் அருண் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாக அருண் தலைமையில் தொடர்ந்து நடைபெறும் வரும் என்கவுண்டரில் இதுவும் ஒன்றாகும். யார் அவர்?
விவரங்கள்
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என குறிப்பிடப்படும் அருண் IPS
BSP தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்திற்கு பின்னர் சென்னையின் ஆணையராக அருண் பதவி ஏற்றார்.
அதற்கு முன்னர் அவர் அண்ணா நகர், மற்றும் பரங்கி மலை துணை ஆணையராக இருந்தார்.
சென்னை சிட்டியின் ஆணையராக பதவியேற்றதும் அவர் கூறிய முதல் வார்த்தை, "குற்றவாளிகளுக்கு அவர்களுக்கு புரியும் வகையில் பாடம் கற்பிக்கப்படும்" என்றார்.
அதோடு ரௌடியைகளை மண்டியிட செய்வேன் எனவும் உறுதியளித்தார்.
அவர் போக்குவரத்து கூடுதல் ஆணையராக இருந்த காலகட்டத்தில், போக்குவரத்து விதிமீறல்களுக்கு ரொக்கமில்லா மின்-சலான் கட்டண முறையை அறிமுகப்படுத்திய பெருமை அவருக்கு உண்டு.
அண்ணா நகரில் போக்குவரத்து விதிமீறல்களை தானாகவே கண்காணிக்க போக்குவரத்து ஒழுங்குமுறை கண்காணிக்கப்பட்ட மண்டலத்தையும் (TROZ 1) அவர் அறிமுகப்படுத்தினார்.
4வது என்கவுண்டர்
காவல் ஆணையராக பதவியேற்றதும் 4வது என்கவுண்டர்
ஜூலை 2024 இல் சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏ. அருண் பொறுப்பேற்றதிலிருந்து நகரில் நடந்த நான்காவது என்கவுண்டர் இன்று நடந்த ஈரானிய கொள்ளையன் மரணம் ஆகும்.
இதற்கு முன்னர் சில மாதங்களுக்கு முன்னர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலையில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடம், போலீசார் மாதவரம் ஏரிக்கு சாட்சியங்களை சேகரிக்க அழைத்துச் சென்றபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதேபோல், 60க்கும் மேற்பட்ட வழக்குகளைக் கொண்ட வரலாற்று குற்றவாளியான காக்காத்தோப்பு பாலாஜி, வியாசர்பாடியில் ஒரு போலீஸ் குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மற்றொரு உயர்மட்ட வழக்கில், ஆந்திராவில் கைது செய்யப்பட்டு நகரத்திற்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலக தாதாவான 'சீசிங்' ராஜாவும் இதே போல சாட்சியங்கள் சேகரிக்க சென்ற இடத்தில் காவல்துறையினரால் கொல்லப்பட்டார்.