1970இல் பிபிசி-யை தடை செய்த இந்திரா காந்தி: ஒரு பார்வை
2002 குஜராத் கலவரத்தைப் ஆய்வு செய்யும் "இந்தியா: தி மோடி கொஸ்டின்" என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி பற்றிய சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் வெளியானதில் இருந்து இந்தியாவில் பெரும் சர்ச்சை உருவாகி இருக்கிறது. இதே போன்ற சம்பவம் 1970இல் நடைபெற்றது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? 1970இல் கொல்கத்தாவின் இயல்பு வாழ்க்கையை விவரிக்கும் 'கல்கத்தா' என்ற ஆவணப்படத்தையும், இந்தியாவில் நிலவிய வறுமை, சாதிய அமைப்புகள், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றை மையப்படுத்திய `Phantom India' என்ற ஆவணத்தொடரையும் பிபிசி வெளியிட்டது. இது இந்திய அரசாங்கத்திற்கு எதிராக இருந்ததால், இந்தியத் தூதரகம் சார்பில் இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
2 ஆவணப்படங்களும் முடக்கப்பட்டன
ஆனால், ஆவணப்படம் ஒளிபரப்படுவதை நிறுத்த முடியாது என்று பிபிசி கூறவே, அப்போதைய பிரதமரான இந்திரா காந்தி பிபிசிக்கு தடை விதித்தார். இந்தியாவில் இருந்த பிபிசி அலுவலகம் மூடப்பட்டது. `உலக அரங்கில் இந்தியாவை தரக்குறைவாக காட்டுவதா?' என்று அதற்கு ஒரு கேள்வியை அவர் முன்வைத்திருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகே இந்தியாவில் இயங்க பிபிசிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஊடக சுதந்திரம் என்ற அடிப்படையில் இது போன்ற ஆவணப்படங்களும் செய்திகளும் வெளியிடப்படுகின்றன. ஊடங்களின் சுதந்திரத்தை அரசியலமைப்பின் பிரிவு 19(1)(a) பாதுகாக்கிறது. இது பேசுவதற்கும், கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் அனைவருக்கும் உரிமையை வழங்குகிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் ஊடகங்களை பேசவிடாமல் தடைசெய்தால் ஜனநாயகம் பாசிசமாக மாறிவிடும் என்றாலும், ஊடங்கங்கள் உண்மையைத் தான் சொல்கின்றனவா என்பது சிந்திக்க வேண்டிய கேள்வியே.