பிரதமரின் ஆவணப்படம்: தடைக்கு எதிரான மனுக்களை அடுத்த வாரம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
2002 குஜராத் கலவரத்தைப் ஆய்வு செய்யும் "இந்தியா: தி மோடி கொஸ்டின்" என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி பற்றிய சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் இங்கிலாந்தில் வெளியானது. இதற்கு தடை விதித்த இந்திய அரசு, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட இதன் இணைப்புகள் அனைத்தையும் நீக்க வைத்ததாக கூறப்படுகிறது. மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று(ஜன 30) ஒப்புக்கொண்டது. இந்த மனுக்களின் விசாரணை பிப்ரவரி 6ஆம் தேதி நடக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. மத்திய அரசின் இந்த தடை உத்தரவு "தவறானது" மற்றும் "அரசியலமைப்பிற்கு விரோதமானது" என்பதால் இது உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று ஒரு மனுவில் கூறப்பட்டிருக்கிறது.
பிப்ரவரி 6ஆம் தேதி விசாரணைக்கு வரும் மனுக்கள்
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, வழக்கறிஞர் எம்.எல்.சர்மா மற்றும் மூத்த வழக்கறிஞர் சி.யு.சிங் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை இன்று(ஜன 30) பரிசீலனை செய்தது. மனுதாரர்கள் தங்களின் தனி மனுக்களை சீக்கிரம் விசாரிக்க வேண்டும் என்று கோரி இருந்தனர். இதனையடுத்து, பிபிசி ஆவணப்படம் மீதான தடைக்கு எதிரான மனுக்களை பிப்ரவரி 6ஆம் தேதி விசாரிக்க அமர்வு ஒப்புக்கொண்டது. ஒரு மனு சர்மாவால் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மற்றொன்று மூத்த பத்திரிகையாளர் என் ராம், ஆர்வலர்-வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.