உலகளாவிய பசுமை எரிபொருள் கூட்டணி குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
உலகின் 19 நாடுகள், ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் ஆப்பிரிக்க கூட்டமைப்பு பங்கெடுக்கும் 18வது ஜி20 உச்சிமாநாடு டெல்லியில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் டெல்லி பிரகடனமத்தை உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொண்டதாக நேற்று அறிவித்தார் பிரதமர் மோடி. அதனைத் தொடர்ந்து, உலகளாவிய பசுமை எரிபொருள் கூட்டணியையும் (Global Biofuels Alliance) பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்திருக்கிறார். உலகளவில் பசுமை எரிபொருளின் தயாரிப்பு மற்றும் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த உலகளாவிய பசுமை எரிபொருளை கூட்டணியை உருவாக்கியிருக்கிறது இந்தியா. இந்தக் கூட்டணியில் இந்தியா, அமெரிக்கா, பிரேசில், கனடா, இத்தாலி, அர்ஜென்டினா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 7 ஜி20 நாடுகள் உட்பட 19 நாடுகள் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய பசுமை எரிபொருள் கூட்டணி:
தற்போது இந்தியா தொடங்கி வைத்திருக்கும் இந்த பசுமை எரிபொருள் கூட்டணியானது, உளகளவில் பசுமை எரிபொருள் உற்பத்தி மற்றும் வணிகத்திற்கான கட்டமைப்பை உருவாக்குவது மற்றும் மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தவிருக்கிறது. இதுமட்டுமின்றி பசுமை எரிபொருளுக்கான சர்வதேச தர நிர்ணயம், நிலைத்தன்மைக்கான கொள்கைகள் மற்றும் அதனை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகள் ஆகியவற்றையும் முன்னெடுக்கவிருக்கிறது. சர்வதேச அமைப்புகளான, உலக வங்க, ஆசிய மேம்பாட்டு வங்கி, உலக பொருளாதார மன்றம், உலக எல்பிஜி அமைப்பு, ஐக்கிய நாடுகளின் அனைவருக்கும் ஆற்றல் அமைப்பு, UNIDO, சர்வதேச பொது விமானப் போக்குவரத்து அமைப்பு, சர்வதேச ஆற்றல் அமைப்பு மற்றும் சர்வதேச ஆற்றல் மன்றம் ஆகிய அமைப்புகளும் இந்த பசுமை எரிபொருள் கூட்டணியில் இணைந்திருக்கின்றன.
பசுமை எரிபொருள் தயாரிப்பில் இந்தியா:
உலகளவில் பசுமை எரிபொருள் தயாரிப்பில் முன்னணி நாடுகளுள் ஒன்றாக விளங்கி வருகிறது இந்தியா. மேலும், இந்த பசுமை எரிபொருளை பெட்ரோலுடன் கலந்து பயன்படுத்தும் அளவை கொஞ்சம் கொஞ்சமா அதிகரித்து வருகிறது இந்தியா. தற்போது 20% வரை எத்தனால் கலந்த பெட்ரோலை விற்பனை செய்யும் அளவிற்கு இந்தியாவில் பசுமை எரிபொருள் பயன்பாடு உயர்ந்திருக்கிறது. முழுவதுமா பசுமை எரிபொருள் பயன்பாடு என்ற இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது இந்தியா. 2021-22 நிதியாண்டில் மட்டும் 433.6 கோடி லிட்டர் எத்தனாலை பெட்ரோலுடன் கலந்து விற்பனை செய்திருக்கின்றன இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள். மேலும், 2022ல் 185 மில்லியன் லிட்டர்களாக இருந்த இந்தியாவின் பசுமை எரிபொருள் உற்பத்தி , 2023ல் 200 மில்லியன் லிட்டர்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.