நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றவாளிகளின் நோக்கம் என்ன?
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைக் கையாளும் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, நேற்று நடந்த நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. டெல்லி போலீசார் இதுவரை ஐந்து குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். ஆறாவது குற்றவாளி இன்னும் தலைமறைவாக உள்ளார். குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் நான்கு ஆண்டுகளாக தொடர்பில் இருந்ததாகவும், சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே இந்த அத்துமீறலை மிக நுணுக்கமாக அவர்கள் திட்டமிட்டதாகவும் விசாரணையின் போது தெரியவந்துள்ளது. பல்வேறு பிரச்சினைகளின் பக்கம் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்த பாதுகாப்பு அத்துமீறலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
மொபைல் போன்களுடன் தலைமறைவான குற்றவாளி
வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சனைகள் மற்றும் மணிப்பூர் வன்முறை போன்ற பிரச்சனைகளால் தாங்கள் வருத்தமடைந்ததாகவும், அதனால் தான் நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விஷயங்கள் குறித்து மக்களவை உறுப்பினர்கள் விவாதிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் புகை குண்டுகளை வீசியதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால், போலீசார் இந்த காரணங்களை முழுமையாக நம்பவில்லை. அவர்களின் நோக்கத்தைக் கண்டறிய குற்றம் சாட்டப்பட்டவர்களின் மொபைல் போன்களை ஆய்வு செய்ய இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்களது மொபைல் போன்கள் அனைத்தும் தற்போது தலைமறைவாக இருக்கும் குற்றவாளி லலித் ஜாவிடம் உள்ளது. ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் லலித் செல்போன்களுடன் தலைமறைவாகி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.