கொரோனா பாதித்தால் என்ன செய்ய வேண்டும் ? - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்கள்
உலகம் முழுவதும் கட்டுக்குள் வந்திருந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிவேகமாக பரவ துவங்கியுள்ளது. தற்போது பரவும் ஜே.என்.1 வகை கொரோனா பரவுவதில் வேகம் கொண்டுள்ளதுடன், நோய் தடுப்பாற்றலையும் ஊடுருவும் என்று மருத்துவத்துறை தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றைய(ஜன.,4) நிலவரப்படி, இந்தியாவில் நோய் தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 4,423 ஆக அதிகரித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, கொரோனா பாதித்தால் என்ன செய்ய வேண்டும்? என்னும் குழப்பம் நம்முள் பலருக்கு இருக்கும் நிலையில், சில அறிவுறுத்தல்களை சுகாதாரத் துறை அண்மையில் வழங்கியுள்ளது. அதன்படி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் முதல் 5 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும். வீட்டில் முதியோர்கள் இருந்தால் அவர்கள் நிச்சயம் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
நோயாளிகள் எண்ணிக்கைகளை கண்காணிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தல்
அதே போல், இணை நோய்கள் இருப்போரும், வயதானோர்களும் கூட்டம் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் நாட்கள் பண்டிகை காலங்கள் என்பதால் அடுத்த 15 நாட்கள் மிகவும் எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் மக்கள் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகங்களும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படும் எண்ணிக்கையையும், கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கைகளையும் கண்காணிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.
பிஏ 5 வகை திரிபு கொரோனா உயிர்கொல்லியாக கருதப்படுவதாக தகவல்
இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 5 உயிரிழப்புகள் கொரோனாவால் நேர்ந்ததாக பதிவாகியிருந்த நிலையில், தற்போது சென்னையில் ஒருவர் பலியாகியுள்ளார். இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. பிஏ 5 வகை திரிபு தான் இதுவரை பரவிய கொரோனா தொற்றுகளில் உயிர்கொல்லியாக கருதப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற கொரோனா திரிபுகளால் பாதிக்கப்பட்டவர்களை விட ஒமிக்ரான் பிஏ 5 வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் இறப்பு விகிதமே அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.