ஜி20 உச்சிமாநாட்டினால் இந்தியாவுக்கு கிடைத்த பலன்கள் என்ன?
கடந்த 2 நாட்களாக நடந்த ஜி20 உச்சி மாநாடு முடிவடைந்ததை அடுத்து, இந்தியாவின் ஜி20 பிரசிடென்சியும் முடிவடையத் தொடங்குகிறது. வரும் நவம்பர் மாதம் வரை ஜி20யின் தலைவர் பதவி இந்தியாவிடம் தான் இருக்கும். எனினும், இந்த வருடத்திற்கான ஜி20 கூட்டங்கள் பெரும்பாலும் முடிந்துவிட்டன. இந்தியாவின் ஜி20 பிரசிடென்சி முடிவதற்குள், வரும் நவம்பர் மாதத்தில் ஒரு ஆன்லைன் கூட்டத்தை மட்டும் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. ஜி20 உச்சிமாநாடு, அதன் பிரகடனம், இருதரப்பு மற்றும் பலதரப்பு சந்திப்புகள் ஆகியவை இந்தியா வெளியுறவுக் கொள்கைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதையும், முக்கிய நாடுகளுடன் இந்தியா எவ்வளவு பலமான உறவுகளை கொண்டுள்ளது என்பதையும் பிரதிபலித்தது.
இந்திய-அமெரிக்க இரு தரப்பு உறவுகள் மேலும் ஆழமடைந்தன
ஜி20யின் டெல்லி பிரகடனம் இருதரப்பு உறவுகளுக்கு இடையே, குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுடனான உறவுகளில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய தெற்கின் குரலாக இந்தியா உருவெடுக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகள், சர்வ்தேச உறவுகளையும் பலதரப்பு உறவுகளையும் மேம்படுத்த வேண்டும் என்பதற்கான முயற்சிகள் ஆகியவை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுடனான உறவுகளில் தாக்கங்களை ஏற்படுத்த வல்லது. இந்தியா தொடங்கியுள்ள இந்தியா-மத்திய கிழக்கு நாடுகள்-ஐரோப்பா ஆகியவற்றை இணைக்கும் வழித்தடங்கள் சர்வதேச அரங்கில் இந்தியா உருவாக்கி இருக்கும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டதும், தற்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜி20 மாநாட்டிற்காக இந்தியா வந்திருந்ததும் இருநாட்டு உறவுகள் மேலும் ஆழம் அடைந்துள்ளதை காட்டுகிறது.