3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி
'தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்கள் மற்றும் அரசின் உத்தரவுகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க வேண்டும்' என்றும், 'ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அதன்படி இந்த வழக்கானது கடந்த 10ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதியான சந்திரசூட் தலைமையிலான அமர்வு, 'சட்டசபை மசோதாக்களை ஆளுநர் நிறுத்திவைக்க முடியாது' என்றும், 'இதுகுறித்து விரைந்து ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்' என்றும் தெரிவித்திருந்தது. மேலும், இதுகுறித்து பதிலளிக்க ஆளுநர் மற்றும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
வழக்கின் அடுத்த விசாரணை 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு
இதனிடைய, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பிய 10 மசோதாக்களை ஆளுநர் கடந்த 13ம்.,தேதி திருப்பியனுப்பியது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது. இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணை இன்று(நவ.,20)மீண்டும் நடைபெற்ற நிலையில், 'கடந்த 10ம்.,தேதி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறபித்த பிறகும் மசோதாக்களை திருப்பியனுப்பியது ஏன்?' என்றும், 'கடந்த 2020ல்.,இருந்து மசோதாக்கள் நிலுவையில் உள்ளது. 3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?' என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார். அதனைத்தொடர்ந்து, "இந்திய அரசியலமைப்பு சட்டம் 200ன்-படி, மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பதாக ஆளுநர் கூறமுடியாது" என்று கூறிய நீதிபதிகள் அமர்வு, "மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தினை அணுகும்வரை ஆளுநர் ஏன் காத்திருக்க வேண்டும்?"என்றும் கேள்வியெழுப்பியுள்ளது. தொடர்ந்து இவ்வழக்கின் அடுத்த விசாரணை வரும் 24ம்.,தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.