மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் - பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை
மேற்கு வங்காளத்தில், கடந்த மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த சனிக்கிழமையன்று கடும் வன்முறை அரங்கேறியது. வேட்புமனு தாக்கல் செய்யவந்த எதிர்க்கட்சிகள் மீது, அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்திய இக்கலவரத்தில், 42பேர் உயிரிழந்ததாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது. அம்மாநிலத்தில் தற்போது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், அங்கிருக்கும் பஞ்சாயத்துராஜ் அமைப்பிலுள்ள 75,000இடங்களில் இந்த உள்ளாட்சி தேர்தலானது நடந்தது. வரும் 2024ம்ஆண்டு நடக்கவுள்ள மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் இந்த பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பாஜக'வுக்கும், திரிணாமுல் காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இன்று(ஜூலை.,11)நடைபெறும் இந்த வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்பிற்கு இடையில் நடந்து வருகிறது.
வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - மாநில ஆளுநர் எச்சரிக்கை
வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடங்களில் மத்திய பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், சிசிடிவி கேமராக்களும் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. இதனிடையே இந்த தேர்தல் நடந்த நாளன்று, வாக்குசாவடிகளை சூறையாடுதல், வாக்குச்சாவடியில் உள்ள அதிகாரிகளை தாக்குதல், துப்பாக்கி சூடு, வெடிகுண்டு தாக்குதல் போன்ற நிகழ்வுகளில், அன்று ஒரே நாளில் மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. தொடர்ந்து, நேற்று(ஜூலை.,10) 650க்கும் மேற்பட்ட வாக்கு சாவடிகளில் மறு வாக்குப்பதிவும் நடந்துள்ளது. இந்நிலையில், இன்று நடக்கும் இந்த வாக்கு என்ணிக்கையின் பொழுது வன்முறையில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில ஆளுநர் ஆனந்த போஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.