ஐபோன் வாங்குவதற்காக 8 மாத குழந்தையை விற்ற மேற்கு வங்காள தம்பதி
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்கள் தரமாக படமெடுப்பதற்காக, ஐபோன் வாங்க காசில்லாமல், பெற்ற குழந்தையை விற்ற பாசக்கார பெற்றோர் பற்றிய செய்தி தற்போது வைரலாகி வருகிறது. மேற்குவங்காளம், பாரக்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜெய்தேவ்-சதி தம்பதி. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும், 8 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்த தம்பதி, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில், ஒருநாள், அவர்கள் 8 மாத குழந்தையை காணவில்லை. இதுபற்றி பெற்றோர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளாத நிலையில், ஜெய்தேவ் கையில் விலையுயர்ந்த ஐபோன் ஒன்றை கண்டுள்ளனர் அக்கம்பக்கத்தினர்.
காசுக்காக குழந்தையை விற்ற பெற்றோர்
இதுபற்றி அக்கம்பக்கத்தினர் ஜெய்தேவிடமும், சதியிடமும் விசாரித்துள்ளனர். ஆனால் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்துக்கு வீட்டார், போலீசிடம் தகவல் அளித்தனர். இதனையடுத்து, போலீசார் விசாரித்ததில், அந்த தம்பதி, பணத்திற்காக குழந்தையை விற்றது தெரிய வந்தது. உடனே நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், விலைக்கு வாங்கியவரிடமிருந்து குழந்தையை மீட்டு, குழந்தையின் தாய் சதியை கைது செய்தனர். ஆனால், ஜெய்தேவ் தலைமறைவாகிவிட்டார் என கூறப்படுகிறது. இருப்பினும், ஐபோன் வாங்கத்தான் குழந்தையை விற்றார்களா இந்த தம்பதி என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரு வேளை, 70,000 ரூபாய் மதிப்புள்ள அந்த ஐபோனை வாங்கத்தான், இந்த பெற்றோர்கள் குழந்தையை விற்றிருந்தால், இவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டுமென சமூக வலைத்தளத்தில் பலரும் சாடி வருகின்றனர்.