மக்கள் நலன் கருதி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என மம்தா பானர்ஜி அறிவிப்பு
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் பணியாற்றிய பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், போராட்டம் நடத்தும் ஜூனியர் டாக்டர்கள் குழுவினர் முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், அதை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் எனவும் கோரி மாநில தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டனர். ஆனால், ஒளிப்பதிவு செய்து, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி வெளியிடலாம் எனக் கூறிய மம்தா பானர்ஜி போராட்ட குழுவினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.
நேரடி ஒளிபரப்பு இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்த டாக்டர்கள் மறுப்பு
நேரடி ஒளிபரப்பு இல்லாமல் எந்தவித பேச்சுவார்த்தையிலும் ஈடுபட முடியாது எனக் கூறி முதல்வர் மம்தா பானர்ஜியின் கோரிக்கையை போராட்டக் குழுவினர் நிராகரித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நீண்ட நேரம் காத்திருந்த முதல்வர் மம்தா பானர்ஜி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். ஜூனியர் டாக்டர்கள் குழுவினருக்காக இரண்டு மணி நேரம் காத்திருந்த பின்னர் செய்தியாளர்களிடம், "எங்கள் அரசு அவமதிக்கப்பட்டுள்ளது, இதில் அரசியல் சாயம் இருப்பது சாமானிய மக்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு நீதி வேண்டாம், நாற்காலி வேண்டும். மக்கள் நலன் கருதி பதவி விலகத் தயார், எந்த பதவியும் வேண்டாம். திலோத்தமாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், பொது மக்கள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்." என்று தெரிவித்தார்.