LOADING...
வங்காளத்தில் இன்று இறுதிக்கட்டப் போர்: 142 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்
வங்காளத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது (pc: https://www.thehindu.com/)

வங்காளத்தில் இன்று இறுதிக்கட்டப் போர்: 142 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 29, 2026
07:39 am

செய்தி முன்னோட்டம்

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில், தெற்கு வங்காளத்தின் 142 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) மற்றும் பாரதிய ஜனதா கட்சி (BJP) இடையே நிலவும் நேரடிப் போட்டியில், மாநிலத்தின் அதிகாரம் யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் முக்கியக் கட்டமாக இது பார்க்கப்படுகிறது. இந்தக் கட்டத்தின் மிக முக்கியமான தொகுதியாக பவானிபூர் கருதப்படுகிறது. இங்கு முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பாஜகவின் சுவேந்து அதிகாரி இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இது வெறும் தொகுதிப் போட்டி மட்டுமல்ல, இரு கட்சிகளின் கௌரவப் போராட்டமாகவும் பார்க்கப்படுகிறது.

கள நிலவரம்

தெற்கு வங்காளம்: திரிணாமுல் கோட்டையை தகர்க்குமா பாஜக?

கடந்த 15 ஆண்டுகளாக தெற்கு வங்காளம் திரிணாமுல் காங்கிரஸின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்து வருகிறது. கொல்கத்தா, ஹவுரா, ஹூக்ளி, நதியா மற்றும் 24 பர்கானாஸ் மாவட்டங்களை உள்ளடக்கிய இந்தப் பகுதியில், கடந்த தேர்தலில் பாஜக மிகக் குறைந்த இடங்களையே வென்றது. வட வங்காளத்தில் முதற்கட்டத் தேர்தலில் 93.17% வாக்குகள் பதிவாகி சாதனை படைத்த நிலையில், தெற்கு வங்காளத்திலும் அதிக வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 64 தொகுதிகளை கொண்ட 24 பர்கானாஸ் மாவட்டங்கள் இந்த தேர்தலின் தலைவிதியை தீர்மானிக்கப் போகின்றன.

SIR

வாக்காளர் பட்டியல் சர்ச்சை

இந்தத் தேர்தலில் 'சிறப்புத் தீவிர திருத்தப் பணி' (SIR) மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து லட்சக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வட 24 பர்கானாஸில் 12.6 லட்சமும், தெற்கு 24 பர்கானாஸில் 10.91 லட்சமும், கொல்கத்தாவில் சுமார் 6.97 லட்சம் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன. சுமார் 25 தொகுதிகளில் நீக்கப்பட்ட பெயர்களின் எண்ணிக்கை, கடந்த தேர்தலின் வெற்றி வித்தியாசத்தை விட அதிகமாக உள்ளது. இது தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். தேர்தல் நாளன்று வன்முறை ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. சமீபத்தில் தெற்கு 24 பர்கானாஸில் நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவங்கள் பதற்றத்தை அதிகரித்துள்ளன.

Advertisement