LOADING...
'ஈரானை நம்ப முடியாது!': ஹார்முஸ் நீரிணையைத் திறக்க அமெரிக்கா மறுப்பு
ஹார்முஸ் நீரிணையைத் திறக்க அமெரிக்கா மறுப்பு

'ஈரானை நம்ப முடியாது!': ஹார்முஸ் நீரிணையைத் திறக்க அமெரிக்கா மறுப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Apr 28, 2026
09:20 am

செய்தி முன்னோட்டம்

ஈரான் முன்வைத்துள்ள புதிய சமாதான ஒப்பந்தத்தை அமெரிக்கா நிராகரித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பது தொடர்பான ஈரானின் நிபந்தனைகளை ஏற்க முடியாது என்றும், ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தைத் தடுப்பதே தங்களின் முதன்மை நோக்கம் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை அன்று 'பாக்ஸ் நியூஸ்' ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ஈரானின் சமாதானத் தூது குறித்து பேசிய ரூபியோ, "ஹார்முஸ் நீரிணையைத் திறப்பதாக ஈரான் கூறுவது ஒரு மாயை. அவர்களின் அனுமதி பெற்று, அவர்களுக்குப் பணம் கொடுத்துச் செல்ல வேண்டும் என்பது நீரிணையைத் திறப்பது ஆகாது. இது ஒரு சர்வதேச நீர்வழிப்பாதை; இதில் ஈரானின் ஆதிக்கத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது" என்றார்.

அணு ஆயுதம்

"ஈரானின் யோசனை ஆபத்தானது"

"அணுசக்தி குறித்த பேச்சுவார்த்தைகளைத் தள்ளிவைக்கலாம் என்ற ஈரானின் யோசனை ஆபத்தானது. இந்த மதவாத ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வரை, அவர்கள் அணு ஆயுதம் பெறுவதைக் குறிக்கோளாகக் கொண்டிருப்பார்கள். அதைத் தடுப்பதே எங்களது முக்கியப் பணி." ஈரானியர்கள் மிகவும் திறமையான பேச்சாளர்கள். அவர்கள் இப்போது பேச்சுவார்த்தை என்ற பெயரில் நேரத்தை வீணடிக்கப் பார்க்கிறார்கள். அதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம்." என்றும் ரூபியோ கூறினார்.

ஆலோசனை

வெள்ளை மாளிகையின் ஆலோசனை

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் இது குறித்துக் கூறுகையில், அதிபர் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் குழு திங்கட்கிழமை கூடி ஈரானின் முன்மொழிவுகள் குறித்து ஆலோசித்ததாகத் தெரிவித்தார். இருப்பினும், இந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவர் எவ்விதத் தகவலையும் வெளியிடவில்லை. இது குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் (LNG) சுமார் 20 சதவீதம் ஹார்முஸ் நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. இதன் முடக்கம் காரணமாக ஏற்கனவே சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்து வரும் சூழலில், அமெரிக்காவின் இந்த நிராகரிப்பு உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement