ராணுவத்திற்காக அதிகம் செலவு செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 5-வது இடம்
செய்தி முன்னோட்டம்
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) திங்கட்கிழமை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டில் உலகிலேயே இராணுவத்திற்காக அதிக நிதி செலவிட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. உலகளாவிய இராணுவ செலவில் இந்தியாவின் பங்கு 3.2% ஆக உள்ளது. 2025-ஆம் ஆண்டில் உலக நாடுகளின் மொத்த இராணுவச் செலவு $2,887 பில்லியன் ஆக உயர்ந்துள்ளது. இதில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ள நாடுகள்: 1. அமெரிக்கா 2. சீனா - $336 பில்லியன் (7.4% உயர்வு) 3. ரஷ்யா 4. ஜெர்மனி 5. இந்தியா- $92.1 பில்லியன் (8.9% உயர்வு)
காரணம்
இந்தியாவின் இராணுவச் செலவு உயரக் காரணம் என்ன?
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் இராணுவச் செலவு 8.9% அதிகரித்துள்ளது. இதற்குப் பின்வரும் காரணங்கள் முக்கியமானவை: ஆபரேஷன் சிந்துார்: பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, ஆயுதப் படைகள் தங்களைப் போருக்குத் தயார் நிலையில் வைத்திருக்க அவசரக்கால அடிப்படையில் பல ஆயுதங்களைக் கொள்முதல் செய்தன. பட்ஜெட் ஒதுக்கீடு: 2026-27 மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்காக ₹7.85 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ₹2.19 லட்சம் கோடி புதிய ஆயுதங்கள், போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்கப் பயன்படுத்தப்படும். எல்லை பதற்றம்: சீனா மற்றும் பாகிஸ்தான் உடனான எல்லைப் பதற்றங்கள் இந்தியாவின் பாதுகாப்பு செலவை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. பாகிஸ்தானின் இராணுவச் செலவும் 11% உயர்ந்து $11.9 பில்லியனாக உள்ளது.
ஆயுத இறக்குமதி
ஆயுத இறக்குமதியில் மாற்றம்: ரஷ்யாவிடம் இருந்து விலகும் இந்தியா
இந்தியா தனது ஆயுத இறக்குமதியை 2016-20 மற்றும் 2021-25 காலகட்டங்களுக்கு இடையே 4% குறைத்துள்ளது. இருப்பினும், உலகளாவிய ஆயுத இறக்குமதியில் 8.2% பங்களிப்புடன் இந்தியா இன்னும் 2-வது இடத்தில் உள்ளது. இந்தியா தனது இராணுவத் தேவைகளுக்காக ரஷ்யாவைச் சார்ந்திருப்பதை வெகுவாகக் குறைத்து வருகிறது. 2011-15 இல் 70% ஆக இருந்த ரஷ்யாவின் பங்கு, தற்போது 40% ஆகக் குறைந்துள்ளது. தற்போது பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு ஆயுதங்களை வழங்கும் முக்கிய நாடுகளாக உருவெடுத்துள்ளன.