மோக்கா புயல்: தமிழகத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று(மே-8) ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது மே-9ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், மே-10ஆம் தேதி மோக்கா புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது. மே-9 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. கனமழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள்-- நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, கன்னியாகுமாரி
மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
மே-10 தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. மே-11 முதல் மே-13 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. மோக்கா புயல் வலுப்பெற வாய்ப்புள்ளது என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸாகவும் இருக்கும்.