LOADING...
வெப்பத்தின் பிடியில் தமிழகம்! இந்த ஆண்டு கோடை வெயில் கொளுத்தி எடுக்க போகுதாம்
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு கோடை கால வெப்பம் அதிகரிக்கும்

வெப்பத்தின் பிடியில் தமிழகம்! இந்த ஆண்டு கோடை வெயில் கொளுத்தி எடுக்க போகுதாம்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 25, 2026
04:21 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நிலவிய கடும் பனிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், மார்ச் முதல் வாரத்தில் இருந்தே கோடை காலத்தின் தாக்கம் தொடங்கவுள்ளது. இந்த ஆண்டு கோடை வெயில் கடந்த ஆண்டை விட மிக அதிகமாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்தின் போது மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. ஆனால், இந்த ஆண்டு நிலைமை முற்றிலும் மாறாக இருக்கும். வரவிருக்கும் கோடை காலத்தின் 12 வாரங்களில், சுமார் 4 முதல் 6 வாரங்கள் மிக கடுமையான வறண்ட வானிலை நிலவும். மார்ச் இறுதி வாரத்தில் வெப்பச் சலன இடி மழை பெய்ய வாய்ப்பிருந்தாலும், ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கும்.

எல்-நினோ

எல்-நினோ (El-Nino) பாதிப்பு

உலகளாவிய வானிலை மாற்றமான 'எல்-நினோ' அமைப்பினால் இந்த வெப்பம் அதிகரிப்பு ஏற்படுகிறது. 2026-ஆம் ஆண்டு வெப்பம் அதிகரிக்கும் ஆண்டாகவும், 2027-ஆம் ஆண்டு வெப்பத்தின் உச்சபட்ச ஆண்டாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும், செப்டம்பர் அல்லது அக்டோபர் வரை தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைய வாய்ப்பில்லை. தமிழகத்தில் இந்த கோடை காலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், தேர்தல் பிரசாரங்கள் களைகட்டும். மக்கள் கூட்டம் அதிகம் கூடும் என்பதால், வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து தப்பிக்கப் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்தை பராமரிக்க நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் பழரசங்களை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Advertisement