'பொட்டு ஏன் வைக்கவில்லை': மகளிர் தினத்தன்று பெண்ணிடம் கத்திய பாஜக எம்பி
நெற்றியில் ஏன் பொட்டு வைக்கவில்லை என்று ஒரு பெண்ணிடம் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஒருவர் கேள்வி எழுப்பும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. "உங்கள் கணவர் இன்னும் உயிருடன் இருந்தால், நீங்கள் ஏன் பொட்டு வைக்கவில்லை" என்று பாஜக எம்பி எஸ்.முனிசாமி நேற்று(மார் 8) ஒரு பெண்ணிடம் கேட்டிருக்கிறார். கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள சன்னைஹா மந்திராவில் மகளிர் தினத்தன்று ஒரு ஷாப்பிங் மார்கெட்டை எம்பி முனிசாமி திறந்து வைத்தபோது இந்த உரையாடல் நடந்திருக்கிறது.
பாஜக இந்தியாவை கலாச்சார அடக்குமுறைக்குள் தள்ளுகிறது: கார்த்தி சிதம்பரம்
"நீங்கள் ஏன் பொட்டு வைக்கவில்லை? இங்கு கடை வைக்க யார் உங்களுக்கு அனுமதி கொடுத்தது. யாரோ பணம் கொடுப்பதால் நீங்கள் பொட்டு வைக்க மாட்டீர்களா. முதலில் பொட்டு வையுங்கள். ஏய்! அந்த பெண்ணுக்கு ஒரு பொட்டை எடுத்து கொடு. உங்கள் கணவர் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார் அல்லவா? உங்களுக்கு பொது அறிவு இல்லையா!" என்று அவர் ஒரு பெண் விற்பனையாளரிடம் கூறியுள்ளார். பாஜக தலைவரின் இந்த "பெண் வெறுப்பு" கருத்துக்கு இணையவாசிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். "பாஜக இந்தியாவை 'இந்துத்துவா ஈரானாக' மாற்றும். பாஜகவின் அயதுல்லாக்கள் (மத தலைவர்கள்), தெருக்களில் கலாச்சார காவல்படையை ரோந்து செய்ய விடுவார்கள்." என்று காங்கிரஸ் தலைவர் கார்த்தி சிதம்பரம் இதற்கு குற்றம் சாட்டியுள்ளார்.