உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கும் 'வீ த லீடர்ஸ்': அண்ணாமலை அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் வீ த லீடர்ஸ் அமைப்பு நேரடியாகக் களம் காணும் என்றும், அதனைத் தொடர்ந்து வரும் சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு மாபெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அண்ணாமலை அறிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே 15,000 மரக்கன்றுகள் நடும் சுற்றுச்சூழல் தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், தமிழக இளைஞர்களுக்கு மாறுபட்ட நேர்மையான அரசியல் கண்ணோட்டத்தை வழங்குவதே தங்களது அமைப்பின் முதன்மை இலக்கு என்றும், 2031-ஆம் ஆண்டு மக்கள் எதற்காக வாக்களிக்கிறோம் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டு வாக்களிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்றும் தெரிவித்தார்.
மாற்றம்
கிராமங்கள் தோறும் 12,525 புதிய தலைவர்கள் உருவாக்கம்
நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, "வீ த லீடர்ஸ் அமைப்பு ஒரு முழுமையான அரசியல் கட்சியாக உருவெடுக்கும்போது, இப்படிப்பட்ட கட்சிக்காகத்தான் நாங்கள் பல காலமாக காத்திருந்தோம் என்று மக்கள் பெருமிதத்துடன் கூறுவார்கள்".
"234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தகுதியான தலைவர்கள் தேவைப்படுவது போல, அடிமட்ட அளவில் 12,525 பஞ்சாயத்துத் தலைவர்களும், 8 லட்சத்திற்கும் மேற்பட்ட கவுன்சிலர்களும் உருவாக வேண்டும்".
"அவர்களை எந்தவித எதிர்பார்ப்புமின்றி மக்கள் பணியாற்றும் உண்மையான தலைவர்களாக உருவாக்கும் பணியை நாங்கள் தீவிரமாகச் செய்து வருகிறோம்".
"தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தலை அறிவிக்கும்போது மக்களின் ஆதரவோடு களமிறங்கி ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் புரட்சிகர மாற்றத்தைத் தொடங்குவோம்" எனக் கூறினார்.
சுயநலம்
"கட்சி மாறும் சுயநல அரசியல் கலாச்சாரத்திற்கு சாட்டை"
தற்போதைய அரசியல் சூழலை மிகக் கடுமையாக விமர்சித்த அவர், "மன்னார்குடி மற்றும் இடைத்தேர்தல் நடந்த தாராபுரம் தொகுதியில் வேட்பாளர்களை ஆதரித்து மேடைகளில் தொண்டைத் தண்ணீர் வற்றப் பிரச்சாரம் செய்தோம். காலில் விழுந்து வாக்குக் கேட்டோம்".
"ஆனால், தேர்தலில் வாக்களித்து விரலில் வைத்த மை காய்வதற்குள், வெற்றி பெற்றவர்கள் வேட்டி, கட்சி, ஆட்சி என அனைத்தையும் மாற்றிவிடுகிறார்கள்".
"தேர்தலின்போது தெருத்தெருவாக வந்து வாக்குக் கேட்கும் இந்தத் தலைவர்கள், தினசரி மக்களின் வீட்டுப் பிரச்னைகளைக் கேட்கப் போவதில்லை".
"இந்த சீரழிந்த சுயநல அரசியலை முற்றிலுமாக உடைத்தெறிந்து, அடித்தட்டு மக்களின் குரலாக உள்ளூர் தலைவர்களை உருவாக்குவதற்கே வீ த லீடர்ஸ் களம் காண்கிறது" என்று ஆவேசமாக தெரிவித்தார்.