"எங்களுக்கு நிதீஷ் குமார் தேவையில்லை": பீகார் முதல்வர் கூட்டணியில் இருந்து விலகியதற்கு ராகுல் காந்தி பதில்
கடந்த வாரம் கூட்டணியை மாற்றி பாஜகவுடன் மீண்டும் கைகோர்த்த பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். "ஒரு சிறிய அழுத்தம் கொடுக்கப்பட்டவுடன் அவர் U-டர்ன் எடுக்கிறார். அதனால், எங்களுக்கு நிதீஷ் குமார் தேவையில்லை." என்று ராகுல் காந்தி இன்று தனது பாரத் ஜோடோ நீதி யாத்திரையின் போது ஒரு பொதுக் கூட்டத்தில் கூறினார். 'இண்டியா' கூட்டணி கட்சிகளுடனான கூட்டணியை முறித்து கொண்ட நிதிஷ் குமார் இரண்டு நாட்களுக்கு முன்பு பாஜக கூட்டணியில் மீண்டும் இணைந்தார். இன்னும் 3 மாதங்களில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தையும் பாஜக மற்றும் ஜே.டி.யு ஆகிய கட்சிகள் முடிவு செய்துள்ளன.
பீகாரில் நடந்த ஆட்சி மாற்றம்
2022 இல் பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொண்ட நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் பிற இடது சாரி கட்சிகளுடன் இணைந்தார். 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபையில் தற்போது 79 எம்எல்ஏக்களுடன் ஆர்ஜேடி தனிப்பெரும் கட்சியாக உள்ளது. ஆனால், தனித்து ஆட்சி அமைக்க ஆர்ஜேடி கட்சிக்கு மேலும் 43 உறுப்பினர்கள் தேவை. இந்நிலையில், ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த ஜே.டி.யு கட்சி பாஜகவுடன் இணைந்ததால், சில நாட்களுக்கு முன், பீகாரில் ஆட்சி கலைக்கப்பட்டது. தற்போது, மீண்டும் பாஜகவுடன் சேர்ந்து ஜே.டி.யு கட்சி ஆட்சி அமைத்துள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஒரே நாளில் பதவி விலகி மீண்டும் பதவியேற்றார். இந்நிலையில், தற்போது ராகுல் காந்தி, நிதிஷ்குமார் குறித்து பேசியிருக்கிறார்.