வீடியோ: கனமழை, பனிப்பொழிவை தொடர்ந்து காஷ்மீரில் பயங்கரமான பனிச்சரிவு
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோன்மார்க் பகுதியில் இன்று கடும் மழை மற்றும் பனிப்பொழிவுக்கு இடையே பனிச்சரிவு ஏற்பட்டது. பனி மூடிய மலைப்பகுதியில் பனிச்சரிவு ஏற்படுவதை தெளிவாக காட்டும் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் சில மக்கள் மற்றும் கால்நடைகள் அப்பகுதியை விட்டு வெளியேறுவதையும் அந்த வீடியோவில் காண முடிந்தது. கனமழையால் ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில், நிலச்சரிவில் சிக்கி ஒரு மலையோர வீடு இடிந்து விழுவதையும் அந்த வீடியோ காட்சியைக் காட்டியது.
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்
மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையும் திங்கள்கிழமை மூடப்பட்டது. ராம்பன் மாவட்டத்தில் உள்ள மெஹர், கங்ரூ, மாம் பாஸி மற்றும் கிஷ்த்வாரி பதேர் ஆகிய இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால், காஷ்மீரை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் ஒரே அனைத்து வானிலை சாலையான அந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜம்முவில் உள்ள பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களை தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்துடன் இணைக்கும் மாற்றுப் பாதையான முகல் சாலை, பீர் கி காலி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டதால் மூன்றாவது நாளாக மூடப்பட்டுள்ளது.