திருமண-பலாத்கார வழக்கு: என்ன சொல்கிறது மத்திய அரசு
திருமண பலாத்காரத்தை குற்றமாக்குவது தொடர்பான மனுக்கள் மீது மாநில அரசுகளின் கருத்தைக் கேட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று(ஜன:16) தெரிவித்தது. கடந்த ஆண்டு செப்டம்பரில் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய திருமண பலாத்கார வழக்கின் மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் நேற்று விசாரித்தது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்தார். இந்திய தலைமை நீதிபதி(சிஜேஐ) டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வுக்கு அவர் அளித்த பதிலில், இந்த விவகாரத்தில் சட்டரீதியான பாதிப்புகள் மட்டுமின்றி சமூக பாதிப்புகளும் ஏற்படும் என்று தெரிவித்திருக்கிறார். மேலும், இதே பிரச்சினையை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றத்திற்கும் இதே நிலைப்பாட்டை தான் மத்திய அரசு எடுத்ததாக கூறினார்.
வழக்கு மார்ச் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
"இந்த விவகாரம் சமூக மாற்றங்களை உள்ளடக்கியது என்பதால், மாநிலங்களிடம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது" என்று உச்ச நீதிமன்றத்திற்கு மேத்தா பதிலத்திருக்கிறார். மேலும் மனு மீது பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். பதில் மனு தாக்கல் செய்ய பிப்ரவரி 15 வரை கால அவகாசம் அளித்த உச்ச நீதிமன்றம், வழக்கை மீண்டும் மார்ச் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.