சிறுமிகளுக்கு கன்னித்தன்மை சோதனை - தமிழக தலைமை செயலாளருக்கு நோட்டீஸ்
கடலூர் மாவட்டம்,சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தை திருமணம் செய்து வைத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடலூர் மாவட்ட காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் குழந்தை திருமணம் செய்த 2 தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பினை அப்போது ஏற்படுத்தியநிலையில், இந்த வழக்குப்பதிவு, கைது நடவடிக்கை என்பது அனைத்தும் பொய் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று(மே.,4)ஊடகத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். தொடர்ந்து இந்த வழக்கின்படி, 6,7மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இருவிரல் கன்னித்தன்மை சோதனை மேற்கொள்ளப்பட்டது. இது குழந்தைகள் உரிமைமீறல் என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
மேலும் அந்த நடராஜர் கோயிலினை அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காகவே இவ்வாறு செய்யப்பட்டது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இவரின் இந்த பேட்டியானது இணையத்தில் வைரலானது. இந்த பேட்டியின் அடிப்படையில் தற்போது தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து இந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு தமிழக தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், தீட்சிதர்களின் குழந்தைகள் சம்பந்தப்பட்ட இந்த வழக்கு குறித்து 7 நாட்களில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அந்த அறிக்கையில் குறிப்பிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து சமூக நலத்துறை சார்பில் அளிக்கப்பட்ட புகார்கள் குறித்த விவரங்கள் குறித்தும் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.