இடம்புரி மற்றும் வலம்புரி விநாயகர்: யானை முகத்தானை எப்படி வழிபடுவது நல்லது?
நாடு முழுவதும் நாளை(செப்டம்பர்-18) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு, இடம்புரி மற்றும் வலம்புரி விநாயகரின் வித்தியாசத்தை இப்போது பார்க்கலாம். விநாயகரின் தும்பிக்கை வலது பக்கமாக சுழிந்திருந்தால் அவரை வலம்புரி விநாயகர் என்று அழைக்கிறோம். அவரது தும்பிக்கை இடது பக்கமாக சுழிந்திருந்தால் இடம்புரி விநாயகர் என்று அழைக்கிறோம். இதுபோக, நேராக தும்பிக்கை கொண்ட விநாயகர் சிலைகளும் உள்ளன. இப்படிப்பட்ட சிலைகளை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வ செழிப்பு அதிகரிக்கும். ஆனால், வலம்புரி விநாயகரை வீட்டில் வைத்து வழிபடுவது ஏற்றதல்ல. கோவில்களிலும் சில கோவில்களில் மட்டுமே நம்மால் வலம்புரி விநாயகரை வழிபட முடியும். வலம்புரி விநாயகர் காட்சிதரும் கோவில்கள்--பிள்ளையார்பட்டி, செவல்பட்டி, செட்டிநாடு கோவில்கள், குடைவரைகோட்டை, மதுரை மீனாட்சியம்மன் கோவில், திருவலஞ்சுழி, மும்பை சித்திவிநாயகர் கோவில்.
இடம்புரி மற்றும் வலம்புரி விநாயகரை வணங்கினால் என்ன நன்மைகள் கிடைக்கும்?
பொதுவாக, வலம்புரி விநாயகரை வணங்கினால் வேண்டிய வரம் எல்லாம் கிடைக்கும் என்றும் இடம்புரி விநாயகரை வணங்கினால் இடர் எல்லாம் தீரும் என்றும் கருதப்படுகிறது. நாட்டில் உள்ள பெரும்பாலான கோவிகளில் விநாயகர் இடம்புரி விநாயகராகவே காட்சி தருகிறார். பெரும்பாலும் வீடுகளில் வைத்து வழிபடக்கூடிய விநாயகராகவும் இடம்புரி விநாயகரே இருக்கிறார். இடம்புரி விநாயகரை வழிபட்டால் தடைகள் எல்லாம் நீங்கும் என்று சிற்ப சாஸ்திரம் கூறுகிறது. இது தவிர, இடம்புரி மற்றும் வலம்புரி விநாயகர் இருவரும் அருள்புரியக்கூடிய கோவில்களும் சில உள்ளன. இடம்புரி மற்றும் வலம்புரி விநாயகர் காட்சிதரும் கோவில்கள்-- பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில், திருவலாங்காடு கோவில்