விழுப்புரத்தில் அனுமதியின்றி நடத்திய ஜோதி ஆசிரமம் - கொடுமை அனுபவித்தவர்கள் மீட்பு
விழுப்புரம், கெடார் அருகே அன்பு ஜோதி என்னும் ஆசிரமம் இயங்கி வந்தது. இங்கு மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. அங்கு தங்கியிருந்தோர் பலர் மாயமானதாக புகார்கள் எழுந்தது. அதுகுறித்து கெடார் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் அங்கு தங்கியிருந்தோரை கட்டிவைத்து சித்திரவதை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து தங்கியிருந்தோரை உள்நோக்கத்துடன் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைத்தல், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தல் உள்ளிட்ட 13பிரிவின்கீழ் அந்த ஆசிரமத்தின் உரிமையாளர், அவர் மனைவி உள்பட 6பேர் மீது கெடார் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது என்றும் கூறப்படுகிறது.
போதை பொருள் கொடுத்து பலாத்காரம் - ஆசிரமத்தை மூட உத்தரவு
மேலும் அங்கு தங்கியிருந்த 142 பேரை போலீசார் பத்திரமாக மீட்டெடுத்துள்ளார்கள். இந்நிலையில் அங்கிருந்து தப்பிய ஒரிசாவை சேர்ந்த ஒரு பெண்மணி கூறுகையில், விழுப்புரத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்ததாகவும், மீட்பு குழுவினர் அவரை அந்த ஆசிரமத்திற்கு அழைத்து சென்று விட்டதாகவும் கூறுகிறார். சங்கிலி கொண்டு கட்டிபோடப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகவும் கூறினார். அங்கிருந்த 5 ஆண்டுகளில் பலமுறை போதை பொருள் கொடுக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். தன்னை தற்காத்து கொள்ள முயன்றப்பொழுது அந்த உரிமையாளர் கூண்டில் வைத்திருந்த குரங்கை கடிக்க வைத்து கொடுமை செய்ததாக கண்ணீர் மல்க கூறினார். இது அனைத்தும் உண்மை என்று தெரியவந்த பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் ஆசிரமத்தை மூட உத்தரவு பிறப்பித்துள்ளார்.