விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் கூட்டம் தர்ணா போராட்டம் - வீசப்பட்ட அடையாள அட்டைகள்
தமிழ்நாடு விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டு பகுதி, எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் 20க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தை சார்ந்த குடும்பங்கள் வசித்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. 25 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் வசித்து வரும் இவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, சாதி சான்றிதழ், மின்சார வசதிகள் போன்றவைகள் வழங்கப்படாமல் உள்ளதாக தெரிகிறது. இவற்றை செய்து தர கோரி நரிக்குறவ சமுதாயத்தினை சார்ந்தவர்கள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வாயிலில் ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டைகள் ஆகியவற்றை தரையில் வீசி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பேச்சுவார்த்தை
இதனையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி போராட்டத்தை கைவிடும் படி கூறியதாக தெரிகிறது. அதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அறிவுறுத்தியதையடுத்து நரிக்குறவர் கூட்டத்தினை சேர்ந்தோர் அங்கிருந்து கலைந்து சென்றதாக கூறப்படுகிறது. நரிக்குறவர் சமூதாயத்தை சேர்ந்தோர் தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டைகளை கீழே வீசி திடீரென ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இப்பகுதியில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் பல இடங்களில் நரிக்குறவர் சமுதாயம் போன்ற பல சமூதாயத்தை சார்ந்தோர் தங்களுக்கான அடிப்படை உரிமைகளை பெறாமல் பின்தங்கியவாறே உள்ளார்கள் என்று சில கருத்து கணிப்புகள் மூலம் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.