தமிழக டிஜிபி பொதுமக்களுக்கு எச்சரிக்கை-'இரிடியம் முதலீடு' என்னும் பெயரில் மோசடி
தமிழகத்தில் சமீப காலங்களில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. தமிழக காவல்துறையும் இது போன்ற குற்றங்களை தடுக்க பல நடவடிக்கைகள் மற்றும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் 'இரிடியம் முதலீடு' என்னும் மோசடி அதிகரித்து வருகிறது, எனவே மக்கள் தங்கள் பணத்தை இது போன்ற மோசடி கும்பலிடம் பறிகொடுக்காமல் இருக்க கோரி தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை அளித்துள்ளார். அவர் அளித்துள்ள எச்சரிக்கை குறிப்புகள் வருமாறு, கடந்த சில நாட்களாக 'இரிடியம் முதலீடு' என்னும் பெயரில் பொதுமக்களை ஒரு மோசடி கும்பல் ஏமாற்றி வருகிறது. இது குறித்த புகார்களும் அதிகரித்து வருகிறது என்று கூறியுள்ளார்.
ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் 2 ஆண்டுகளில் ரூ.3 கோடி வரை லாபம்
தொடர்ந்து பேசிய அவர், இந்த மோசடி கும்பல் பொதுமக்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, 'இரிடியம் முதலீடு' என்னும் திட்டத்தில் 5லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் அடுத்த 2ஆண்டுகளில் 3கோடி ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறி மக்களை ஏமாற்றி பணத்தை மோசடி செய்துவருகிறார்கள் என்று கூறினார். இதுதொடர்பாக சேலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. கேரளாவிலிருந்தும் இதுகுறித்து தமிழக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து, பொதுமக்கள் தங்கள் பணத்தை இதுபோன்ற மோசடி கும்பலிடம் பறிகொடுக்காமல் உஷாராக கையாள அறிவுறுத்தப்படுகிறது. 'இரிடியம் முதலீடு' என்னும் பெயரில் யாரேனும் அணுகினால் உடனே காவல்துறைக்கு தகவளிக்குமாறு டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.