விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம்
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். பெங்களூரில் உள்ள ஒரு இல்லத்திற்கு மாற்றப்பட்ட ஆசிரம வாசிகளில் பலர் காணாமல் போயுள்ளனர் என்ற புகார்களையும் சிபிசிஐடி விசாரிக்க உள்ளது. ஆசிரம உரிமையாளர் ஜூபின் பேபி (45), கேரளாவைச் சேர்ந்த அவரது மனைவி மரியா (43) மற்றும் அவர்களது கூட்டாளிகளை கற்பழிப்பு மற்றும் தாக்குதலுக்கான குற்றச்சாட்டின் கீழ் உள்ளூர் போலீசார் கைது செய்துள்ளனர். நல்ல சமரியார் அறக்கட்டளையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஆசிரமம், விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூர் கிராமத்தில் மனநலம் குன்றியவர்கள், ஆதரவற்ற பெண்கள், பிச்சைக்காரர்கள் மற்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் இல்லமாக உரிமம் இல்லாமல் 2005 முதல் செயல்பட்டு வருகிறது.
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தை சுற்றியுள்ள மர்மம்
சில மாத "சிகிச்சை"க்குப் பிறகு, பெண்கள் உட்பட, ஆசிரமத்தில் வசித்த பலரை கர்நாடகா மற்றும் ராஜஸ்தானில் உள்ள அசிரமங்களுக்கு அனுப்பிவிட்டதாக அந்த ஆசிரம உரிமையாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக ஆசிரமத்தில் அனுமதிக்கப்பட்ட அவர்களது குடும்ப உறுப்பினர்களை காணவில்லை என்று பலர் புகார் அளித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன. பெங்களூருவில் உள்ள நியூ ஏஆர்கே மிஷன் ஆப் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட 15 பேர், குளியலறையின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இது போன்ற பல மர்மங்கள் அந்த ஆசிரமத்தில் நடந்துள்ளதால் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.