மருத்துவமனைக்கு சென்று தெலுங்கானா முன்னாள் முதல்வர் KCRரை சந்தித்தார் முதல்வர் ரேவந்த் ரெட்டி
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இன்று ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று முன்னாள் முதல்வரும், பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) தலைவருமான கே.சந்திரசேகர் ராவை சந்தித்தார். தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ், தனது பண்ணை வீட்டில் தவறி விழுந்ததைத் தொடர்ந்து, அவருக்கு நேற்று இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தெலுங்கானா சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த வாரம் வெளியான நிலையில், சந்திரசேகர் ராவ், தனது பண்ணை வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்தார். இதனையடுத்து, அவர் ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
KCR விரைவில் குணமடைவார் என்று நம்பிக்கை தெரிவித்த ரேவந்த் ரெட்டி
அங்கு அவருக்கு நேற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அதன் பிறகு, அவர் எழுந்து நடைப்பயிற்சி செய்யும் விடியோக்கள் வெளியாகின. இந்நிலையில், இந்த தேர்தலில் கே.சந்திரசேகர் ராவை வீழ்த்தி வெற்றிபெற்ற காங்கிரஸ் தலைவரும் தற்போதைய தெலுங்கானா முதல்வருமான ரேவந்த் ரெட்டி KCRரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளுக்கு மத்தியில், கே.சந்திரசேகர் ராவை முதல்வர் ரேவந்த் ரெட்டி சந்தித்திருப்பது அரசியல் வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், இதனையடுத்து பேசிய ரேவந்த் ரெட்டி, KCR விரைவில் குணமடைவார் என்றும், விரைவில் அவர் பொறுப்புக்கு திரும்புவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.