பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்பது அரசின் செயல்திட்டத்தில் உள்ளது: மத்திய அமைச்சர்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஜம்மு-காஷ்மீரை மீட்டு இந்தியாவின் ஒரு பகுதியாக மாற்றுவது அரசின் செயல்திட்டத்தில் உள்ளது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று(மே 1) தெரிவித்தார். லண்டனில் வாழ்ந்து வரும் ஜம்மு மற்றும் காஷ்மீரை பூர்வீகமாகக் கொண்ட மாணவர்கள் மற்றும் சமூக குழுக்களுடன் உரையாடியபோது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார். ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு, "1947 முதல் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களின் பாரம்பரியமாக இருந்த கடந்த காலத்தின் பல முரண்பாடுகளை சரிசெய்ய" முயன்று வருகிறது என்று அவர் கூறினார்.
அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அனுமதித்திருதால் இந்த பிரச்சனை எழுந்திருக்காது: அமைச்சர்
"அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தியாவின் மற்ற சமஸ்தானங்களை கையாள்வது போல், ஜம்மு காஷ்மீரையும் கையாள அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் படேலை அனுமதித்திருந்தால், இன்று பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் ஜம்மு காஷ்மீர் பகுதி இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும். PoJK பிரச்சினை ஒருபோதும் எழுந்திருக்காது." என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். "இருப்பினும், சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட PoJKஐ பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்டு மீண்டும் இந்தியாவின் ஒரு பகுதியாக மாற்றுவது பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைமையிலான அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ளது" என்றும் அவர் கூறியுள்ளார்.