வேங்கைவயல் விவகாரம் - மறுப்பு தெரிவித்த 8 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிப்பு
கடந்த டிசம்பர் மாதம் புதுக்கோட்டை, வேங்கை வயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலைத் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வழக்கினை சிபிசிஐடி விசாரணை செய்து வருகிறது. இதனிடையே தற்போது விசாரணை நடத்தியவர்களிடம் இருந்து ரத்தமாதிரிகள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக வேங்கைவயல் இடையூர் பகுதியில் உள்ள 11 பேரிடம் டி.என்.ஏ.பரிசோதனை மேற்கொள்ள காவல்துறை அனுமதி பெறப்பட்டுள்ளது. அதில் 3 பேர்களின் ரத்தமாதிரிகள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எடுத்து சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. மீதமுள்ள 8 பேர் ரத்தமாதிரிகளை தரமறுத்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குப்பதிவும் செய்ததாக தெரிகிறது. இந்த வழக்கின் விசாரணையில் டி.என்.ஏ.பரிசோதனை என்பது மிக அவசியம் என்று சிபிசிஐடி வாதிட்டுள்ளது.
மறுப்பு தெரிவித்த 8 பேரும் புதுக்கோட்டை அரசு கல்லூரி மருத்துவமனைக்கு இன்று(ஜூலை.,5)காலை வருகை
அதனையடுத்து 8 பேருக்கு ரத்த மாதிரிகள் எடுக்க புதுக்கோட்டை நீதிமன்றம் மூலம் அனுமதி பெற சிபிசிஐடி போலீசாருக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியதாக தெரிகிறது. அதன்படி, புதுக்கோட்டை நீதிமன்றத்தில் புதுக்கோட்டை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடை சட்டத்தின் கீழ் மறுப்பு தெரிவித்த 8 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கோரியது. இதன்பேரில், புதுக்கோட்டை நீதிமன்றமும் டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில், குறிப்பிட்ட அந்த 8 பேரும் புதுக்கோட்டை அரசு கல்லூரி மருத்துவமனைக்கு இன்று(ஜூலை.,5)காலை 11.30மணியளவில் போலீஸ் பாதுகாப்போடு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனைக்காக தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.