வேங்கைவயல் விவகாரம் - 4 சிறுவர்களின் ரத்த மாதிரிகள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக சேகரிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில், மனித கழிவுகள் கலந்த விவகாரம் குறித்து, தொடர்ந்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை, சிபிசிஐடிக்கு பின்னர் மாற்றப்பட்டது. அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் டிஎன்ஏ பகுப்பாய்வு மூலம் நீரில் கலக்கப்பட்டது, 2 ஆண்கள் மற்றும் 1 பெண்ணின் மனித கழிவு என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, இறையூர், வேங்கைவயல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 21 பேரிடம் இதுவரை டிஎன்ஏ பரிசோதனைக்காக நீதிமன்றத்தில் அனுமதி பெற்று ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் சென்னை அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைப்பு
இதனிடையே, வேங்கைவயல் கிராமத்தினை சேர்ந்த ஒரு சிறுவன் மற்றும் இறையூர் பகுதியினை சேர்ந்த 3 சிறுவர்கள் என மொத்தம் 4 சிறுவர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள அனுமதிக்கோரி, புதுக்கோட்டை தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றத்தில், சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவினை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கியது. அதன் பேரில், இன்று(ஜூலை.,21) 4 சிறுவர்களுக்கும் ரத்த மாதிரிகள் எடுக்க முடிவு செய்த நிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நலக்குழுவினரின் வழிகாட்டுதல்படி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. மேலும், சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.