தேசிய கீதம் போல் வந்தே மாதரம் பாடலுக்கும் பாதுகாப்பு: நாடாளுமன்றத்தில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
செய்தி முன்னோட்டம்
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் தேசியச் சின்னங்கள் மற்றும் தேசியப் பாடலின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில், 'தேசியக் கௌரவ அவமதிப்புத் தடுப்பு (திருத்த) மசோதா, 2026 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராயால் தாக்கல் செய்யப்பட்ட இம்மசோதாவின் மூலம், இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலை பாடுவதைத் தடுத்தாலோ, இடையூறு ஏற்படுத்தினாலோ அல்லது அதற்கு அவமரியாதை செய்தாலோ அது குற்றவியல் நடவடிக்கையாகக் கருதப்படும். தேசியக் கொடி, அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டு வரும் சட்டப் பாதுகாப்பைப் போலவே, இனி வந்தே மாதரம் பாடலை அவமதிப்பவர்களுக்கும் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் (அல்லது இரண்டும்) விதிக்க சட்டத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி
மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடி மற்றும் பெல்லட் குண்டு வீச்சுத் தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவே உத்தரவிட்டார் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளும் பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, மன்னிப்பு கேட்க வலியுறுத்தினர்.
ஆளுங்கட்சியினரின் அமளிக்கிடையே, வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்கான 'பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா' மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.