சென்னை-திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை துவங்க முடிவு
வந்தே பாரத் ரயில்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் இந்த ரயிலின் சேவையினை விரிவுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்து தற்போது அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை சென்ட்ரல்-மைசூரு, காசர்கோடு-திருவனந்தபுரம், சென்னை சென்ட்ரல்-கோவை உள்ளிட்ட வழித்தடங்களில் தற்போது தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த 3 வழித்தடங்களில் செல்லும் ரயில்களின் சராசரியான டிக்கெட் முன்பதிவு 100%மேல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் சென்னை-திருநெல்வேலி மற்றும் சென்னை-திருப்பதி இடையே வந்தே பாரத் சேவையினை துவங்குமாறு கோரிக்கைகள் எழுந்தது. ஆனால் சென்னை-திருப்பதி ரயில் சேவைக்கு ரயில்வே வாரியத்தில் அனுமதி அளிக்காத காரணத்தினால், ரயில் சேவைக்கான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ரயில் சேவைக்கான தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என தகவல்
அதனை தொடர்ந்து சென்னை-திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் துவங்கப்படும் என்ற அறிவிப்பு அண்மையில் வெளியாகியுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர், "விரைவில் சென்னை-திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் துவங்கவுள்ளது. ஆனால் அதற்கான தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை" என்று கூறியுள்ளார். மேலும், வந்தே பாரத் ரயிலினை பராமரிப்பதற்காக, மதுரை கோட்டம் திருநெல்வேலி பணிமனையில் பிட்லைன் அமைக்கப்பட்டு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து இந்த ரயில் சேவை வரும் 6ம் தேதி துவங்கவுள்ளது என்று வெளியான தகவலை தெற்கு ரயில்வே முற்றிலுமாக மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.