
ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழகம் முழுவதும் உள்ள பழமை வாய்ந்த பெருமாள் கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வு பெரிய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சொர்க்கவாசல் திறக்கும் நாளன்று, பக்தர்கள் பகல் பத்து, ராப்பத்து விரதம் இருந்து பரமபத வாசல் வழியாக வந்து பெருமாளை வணங்கினால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அதன்படி ஜனவரி 2ம் தேதி வைகுண்ட ஏகாதேசி வைபவம் தமிழகம் முழுக்க பெருமளவில் விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில் இந்த வைபவத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பொன்வரதராஜ பெருமாள் கோயிலில் 2ம் தேதி அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படவுள்ளது.
இதற்கான பணிகளை கோயில் நிர்வாகத்தினர் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.
50,000 லட்டுகள் தயாரிக்கும் பணியில் 25 பேர் ஈடுபாடு
பொன்வரதராஜ கோயில்-32 ஆண்டுகளாக வைகுண்ட ஏகாதேசியன்று லட்டு பிரசாதம்
அதன்படி, பொன்வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பொன்வரதராஜ பெருமாளுக்கு அலங்காரங்கள் சிறப்பாக செய்யப்படவுள்ளது.
இந்நிகழ்வில் பங்கேற்று பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஜனகல்யாண சார்பில் 32வருடங்களாக லட்டு பிரசாதமாக கொடுக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து இந்தாண்டு வரும் பக்தர்களுக்கும் லட்டு வழங்க, 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தனியார் திருமண மண்டபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.
இதற்காக 1000 கிலோ கடலைமாவு, 1000 கிலோ சர்க்கரை, 500 கிலோ நெய், 25 கிலோ முந்திரி, 25 கிலோ திராட்சை, ஜாதிக்காய், ஏலக்காய், கிராம்பு உள்ளிட்டவை 5 கிலோ, 1000 கிலோ கடலெண்ணெய் முதலியவை கொண்டு லட்டு தயாரிக்கும் பணியினை கோயில் நிர்வாகத்தை சேர்ந்த 25 பேர் தீவிரமாக செய்து வருகிறார்கள்.