இந்தியாவில் முதல்முறையாக பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது உத்தரகாண்ட்
உத்தரகாண்ட் மாநிலம் அடுத்த வாரம் பொது சிவில் சட்டத்தை(UCC) அறிமுகப்படுத்த இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உத்தரகாண்ட் இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தினால், பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் இந்திய மாநிலம் என்ற பெயர் உத்தரகாண்டுக்கு கிடைக்கும். ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்ட, உத்தரகாண்டிற்கான UCC வரும் நாட்களில் முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது. உத்தரகாண்ட் சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் தீபாவளிக்கு அடுத்த வாரம் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தின் போது, UCC சட்டம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொது சிவில் சட்டம் என்றால் என்ன?
UCC என்பது மத்திய பாஜக அரசு வழங்கிய ஒரு முக்கிய தேர்தல் வாக்குறுதியாகும். எனவே, தற்போது அதை செயல்படுத்த கோரி சில மாநில அரசாங்கங்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடியும் UCC க்கு ஆதரவாக பல கருத்துக்களை கூறியிருந்ததால், இதை மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்த இருப்பதாக செய்திகள் பரவின. பொதுவாக, இந்தியாவில் உள்ள தனிப்பட்ட சட்டங்கள் மத அடிப்படையில் பிரிக்கப்பட்டவைகளாகும். திருமணம், குழந்தை தத்தெடுப்பு போன்ற விஷயங்களுக்கு ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனியான சட்டங்கள் இருக்கிறது. இந்த சட்டங்கள் எல்லாவற்றையும் நீக்கிவிட்டு பொதுவான சிவில் சட்டம் ஒன்றை கொண்டு வர வேண்டும் என்று நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு முயற்சித்து வருகிறது.