அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ இன்று மும்பை வருகை: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ உஸ்பெகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று இந்தியா வருகை தருகிறார். வழக்கத்திற்கு மாறாக அவர் நாட்டின் தலைநகரான புதுடெல்லிக்கு செல்லாமல், நேரடியாக மும்பைக்கு வருகை தருவது இராஜதந்திர வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பைக்கு வரும் மார்க்கோ ரூபியோ, தாஜ்மகால் பேலஸ் ஹோட்டலில் அமைந்துள்ள தாஜ் நினைவுச்சின்னத்தில் 26/11 பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்.
சந்திப்பு
மும்பை மற்றும் ஜாம்நகர் பயணத் திட்டங்கள்
இன்று பிற்பகலில் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அதனைத் தொடர்ந்து, ஜியோ உலக மாநாட்டு மையத்தில் அமெரிக்க வரலாற்றின் மைல்கற்கள் மற்றும் இருநாட்டு இராஜதந்திர உறவுகளைக் கொண்டாடும் "ஃப்ரீடம் 250 வரவேற்பு நிகழ்ச்சியில்" கலந்துகொள்கிறார்.
மும்பைக்கு பிறகு குஜராத் மாநிலம் ஜாம்நகருக்கு செல்லும் ரூபியோ, முகேஷ் அம்பானிக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய ஒற்றை வளாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான ரிலையன்ஸ் நிறுவனத்தை பார்வையிடுகிறார்.
சர்ச்சை
ராஜதந்திர சர்ச்சையும் அரசியல் எதிரொலியும்
அமெரிக்கத் தூதர் சர்ஜியோ கோர், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்தான் மும்பை சென்று ரூபியோவைச் சந்திக்க வேண்டும் என வாஷிங்டன் எதிர்பார்ப்பதாக கூறியது இந்தியாவில் கடும் அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்தியாவின் உயர் இராஜதந்திரியை வெளிநாட்டு அரசு தனது சொந்த மண்ணிற்கு வரவழைப்பது போன்று செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் மத்திய அரைக் கடுமையாக விமர்சித்துள்ளன.
இருப்பினும், வர்த்தகத் தடைகள், எரிசக்தி பாதுகாப்பு, மற்றும் நிலுவையில் உள்ள இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் இறுதி வடிவம் குறித்தும் இந்தப் பயணத்தின் போது விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.