தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு
தமிழ்நாடு மாநிலத்தில் 2023ம் கல்வியாண்டிற்கான 10ம்வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்கி 20ம்தேதி நிறைவுற்றது. இதன்படி தற்போது இந்த தேர்வின் முடிவுகள் 11ம்வகுப்பு தேர்வுக்கான முடிவுகளோடு சேர்த்து ஒரேநாளில் வெளியாகவுள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னதாகவே கூறியிருந்தார். அதன்படி தற்போது 10ம்வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வரும் மே 19ம்தேதி வெளியிடப்படும் என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், 2023ம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த பொதுத்தேர்வின் முடிவுகள் வரும் வெள்ளிக்கிழமை (மே.,19)அன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்திலுள்ள புரட்சி தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர்.நூற்றாண்டுவிழா கட்டிடத்தின் முதல்தளத்தில் வெளியாகவுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
இணையதளங்களில் தேர்வர்கள் தங்கள் பதிவெண்களை கொண்டு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்
மேலும் அதில், 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வரும் 19ம் தேதி காலை 10 மணிக்கும், 11ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் அதே நாள் பிற்பகல் 2 மணியளவிலும் வெளியிடப்படும். தேர்வு முடிவுகளை மாணவர்கள் tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in உள்ளிட்ட இணையத்தள முகவரிகளை அணுகி தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த இணையதளங்களில் தேர்வர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். அதே போல், ஒவ்வொரு மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை இலவசமாக தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.