காவல்துறையில் பெண்களுக்கு 20% இட ஒதுக்கீடு; உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில காவல்துறையில் வரவிருக்கும் காலிப் பணியிடங்களுக்கான ஆட்தேர்வில் 20 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) அறிவித்தார். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை வலியுறுத்திய அவர், இந்த பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்பவர்களை திறம்பட நடத்துவார்கள் என்று கூறினார். உத்தரப் பிரதேச காவல்துறையில் தற்போது 60,000 பணியிடங்கள் காலியான உள்ளது குறிப்பிடத்தக்கது. யோகி ஆதித்யநாத் மேலும் கூறுகையில், தனது 7 ஆண்டு ஆட்சிக்கு முன் உத்தரப் பிரதேசம் இந்தியாவின் இருண்ட இடமாக அறியப்பட்ட நிலையில், தற்போது வளர்ச்சிக்கான பிரகாசமான இடமாக மாறி முன்னிலையில் உள்ளதாக கூறினார்.
தனது அரசாங்கத்தில் லஞ்சத்திற்கு இடமில்லை எனக் கூறிய யோகி ஆதித்யநாத்
தனது அரசாங்கத்தைப் பாராட்டிய முதல்வர் யோகி ஆதித்யநாத், எந்தவொரு பரிந்துரையும் அல்லது பரிவர்த்தனையும் (லஞ்சம்) இல்லாமல் தனது ஆட்சியில் தகுதியானவர்களுக்கு வேலை கிடைக்கிறது என்று கூறினார். வளர்ச்சியில் உத்தரப் பிரதேசத்தின் பங்களிப்பைப் பற்றிப் பேசிய அவர், முந்தைய ஆட்சிகளில் மாநிலத்தில் மாஃபியாக்கள் ஆதிக்கம் செலுத்திய நிலை தற்போது இல்லை என்றும், கலவரங்களும், அராஜகங்களும் கட்டுப்படுத்தப்பட்டதாக கூறினார். மேலும், இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாட யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார். மாவட்ட அளவிலான மெகா வேலைவாய்ப்பின் கீழ் இளைஞர்களுக்கு பணி நியமனக் கடிதங்களை முதல்வர் யோகி ஆதித்யநாத் வழங்கியபோது இந்த கருத்துக்களை அவர் தெரிவித்தார்.