பல ஆண்டுகளாக பொங்கல் கொண்டாடுவதைத் தவிர்க்கும் தமிழக கிராமங்கள்; இப்படியொரு பின்னணியா?
செய்தி முன்னோட்டம்
சூரியன், கால்நடைகள் மற்றும் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் அறுவடைத் திருநாளாக தமிழகம் முழுவதும் பொங்கல் கொண்டாடப்படும் அதே வேளையில், தமிழகத்தில் உள்ள சில கிராமங்கள் தலைமுறை தலைமுறையாக பொங்கல் கொண்டாடுவதை தவிர்த்து வருகின்றனர்.
நாமக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள சில கிராமங்கள் கடந்த கால சம்பவங்களுடன் பிணைந்துள்ள தனித்துவமான உள்ளூர் நம்பிக்கைகளால் பல தசாப்தங்களாக பொங்கலை கொண்டாடாமல் இருந்து வரும் நிலையில், அதன் சுவாரஸ்ய பின்னணியை இதில் தெரிந்து கொள்ளலாம்.
பொங்கல்
பொங்கலைத் தவிர்க்கும் கிராமங்கள்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகாவில் உள்ள அத்தனூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக பொங்கல் கொண்டாட்டம் தவிர்க்கப்பட்டு வருகிறது.
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு நில உரிமையாளர் பெரும் பொங்கல் பண்டிகையை ஏற்பாடு செய்துள்ளார்.
அதைத் தொடர்ந்து பெரியம்மை பரவியதால் இப்பகுதியில் மக்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்பட்டன.
தெய்வீக வழிகாட்டுதலைக் கோரி, உள்ளூர் மக்கள் கிராம அம்மன் கோவிலில் பிரார்த்தனை செய்தனர்.
அங்கு பொங்கல் கொண்டாடுவது பாதிப்புக்கு வழிவகுத்தது என்று தெய்வ அருள் வாக்கு சொன்னதாக நம்பப்படுகிறது.
அன்றிலிருந்து, கிராம மக்கள் தங்கள் கூட்டு நல்வாழ்வை உறுதி செய்ய பொங்கல் திருவிழாவை கொண்டாடுவதை நிறுத்திவிட்டனர்.
சிங்கிலிப்பட்டி
சிங்கிலிப்பட்டியில் பொங்கலை தவிர்ப்பதன் காரணம்
இதேபோல், நாமக்கல்லில் இருந்து 13 கிலோமீட்டர் தெற்கே உள்ள அழகிய கிராமமான சிங்கிலிப்பட்டியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பொங்கல் கொண்டாடப்படவில்லை.
பொங்கல் பிரார்த்தனைக்கு அளிக்கப்பட்ட பிரசாதத்தை நாய் ஒன்று தின்ற சம்பவத்தை கிராம மக்கள் தீய சகுனமாக கருதியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் பொங்கல் திருவிழா கொண்டாட்டங்களின்போதும் விவரிக்க முடியாத வகையில் கால்நடைகள் இறந்தன.
மேலும் பேரிடர்களுக்கு பயந்து, சமூகம் கூட்டாக கொண்டாட்டத்தை முற்றிலும் கைவிட முடிவு செய்தது.
கேளையாப்பிள்ளையூர்
தென்காசி மாவட்டத்தில் உள்ள கேளையாப்பிள்ளையூர்
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையே அருகே உள்ள கேளையாப்பிள்ளையூர் என்ற கிராமத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு, பொங்கல் பண்டிகை அன்று பொங்கல் வைத்தபோது பானையில் நுரை பொங்கி வராமல் முன் கூட்டியே உலை கொதித்ததாக கூறப்படுகிறது.
பானையில் முதலில் நுரைத் தள்ளி பொங்கினால் தான் அந்த பொங்கலை போல் மக்களின் வாழ்க்கையும் இன்பத்தில் பொங்கி செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை எனும் நிலையில் இது அபசகுணமாக பார்க்கப்பட்டது.
மேலும், அங்குள்ள உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் தை மாத திருவிழா நேரத்தில் அம்மனுக்கு பொங்கல் வைக்காமல் தங்கள் வீடுகளில் பொங்கல் வைத்ததன் காரணமாக தான் இது போன்ற அபசகுணம் ஏற்பட்டதாகவும் ஊர்மக்கள் நம்புவதால், அப்போதிருந்து பொங்கல் கொண்டாடுவதில்லை.