காவி நிற 'வந்தே பாரத்' ரயில் - மத்திய ரயில்வே துறை அமைச்சர் விளக்கம்
இந்திய நாட்டின் வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரியில் டெல்லி-வாரணாசி இடையே பிரதமர் மோடி துவக்கி வைதார். இந்த ரயிலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், நாடு முழுவதும் இதன் சேவையினை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த ரயிலுக்கான பெட்டிகள் சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள ஐ.சி.எப்.,தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. வந்தே பாரத் ரயில் நீலம்-வெள்ளை நிறங்களில் இயங்கி வரும் நிலையில், சோதனை முறையில் வேறுநிறத்திற்கு மாற்ற மத்திய ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, இதன் நிறம் காவி நிறத்திற்கு மாற்றப்பட்டதையடுத்து இதுகுறித்து பலத்தரப்பட்ட விமர்சனங்கள் எழ துவங்கியது.
நிற மாற்றத்தின் பின்னணியிலுள்ள அறிவியல் காரணம்
இதனைத்தொடர்ந்து, வந்தே பாரத் ரயிலுக்கு காவி நிறம் பூசப்பட்டதன் பின்னணியில் எவ்வித அரசியலும் இல்லை, அறிவியல் காரணங்கள் தான் உள்ளது என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மனிதர்களின் கண்களுக்கு 2 நிறங்கள் மட்டுமே நெடுந்தூரத்தில் இருந்தாலும் புலப்படும். அது மஞ்சள் மற்றும் காவி நிறமாகும். அதனால் தான் வந்தே பாரத் ரயிலுக்கு காவி நிறம் பூசப்பட்டுள்ளது" என்று கூறினார். மேலும் அவர், ஐரோப்பிய நாடுகளில் 80%இந்த நிறங்களில் தான் ரயில்கள் இயக்கப்படுகிறது. அதேபோல் விமானங்கள், லைஃப் ஜாக்கெட்டுகள், கப்பல்களின் கருப்பு பெட்டிகள் போன்றவற்றிலும் இந்நிறம் பயன்படுத்த இதுவே காரணமாகும் என்றும் விளக்கமளித்துள்ளார்.