10 மடங்கு அதிகரிக்கும் பயோ-கேஸ் உற்பத்தி! ரூ.23,731 கோடியில் புதிய கோபர்தன் திட்டம்; மத்திய அரசு ஒப்புதல்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் பயோ-கேஸ் உற்பத்தியை அடுத்த பத்தாண்டுகளில் சுமார் 10 மடங்கு அதிகரிக்கும் நோக்கில், ரூ.23,731 கோடி மதிப்பீட்டிலான கோபர்தன் (GOBARdhan) திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) ஒப்புதல் அளித்துள்ளது. கிராமப்புற மக்களின் வருவாயை உயர்த்துவதையும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புதைபடிவ எரிபொருட்களைக் குறைப்பதையும் இலக்காகக் கொண்டு இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் இத்திட்டம் 2026-27 நிதியாண்டு முதல் 2035-36 நிதியாண்டு வரை 10 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது.
பயோ-கேஸ்
கழிவுகளிலிருந்து சுத்தமான பயோ-கேஸ் உருவாக்கம்
விவசாயக் கழிவுகள், சாணம், நகராட்சி நகர்ப்புறக் கழிவுகள் மற்றும் பிற ஆர்கானிக் கழிவுகளைச் சுத்தமான பயோ-கேஸ் மற்றும் இயற்கை உரங்களாக மாற்றுவதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
சிட்டி கேஸ் விநியோக நிறுவனங்கள் தங்களின் பயன்பாட்டில் கட்டாயப் பங்கீடாக 2026-27இல் 3 சதவீதமும், 2027-28இல் 4 சதவீதமும், 2028-29 முதல் 5 சதவீதமும் பயோ-கேஸைப் பயன்படுத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுத்தமான இயற்கை எரிசக்தி பயன்பாடு நாடு முழுவதும் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை நிர்ணயம்
உற்பத்தியாளர்களுக்கான அரசு மானியம் மற்றும் விலை நிர்ணயம்
புதிய பயோ-கேஸ் ஆலைகளைத் தொடங்கும் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில், நாளொன்றுக்கு 1 டன் உற்பத்தி திறன் கொண்ட ஆலைகளுக்கு ரூ.2 கோடி வரை மூலதன மானியமாக மத்திய அரசு வழங்கவுள்ளது.
மேலும், உற்பத்தியாளர்களுக்கு நிலையான வருவாயை உறுதி செய்யவும் நுகர்வோருக்கு சீரான விலையில் வழங்கவும் (ஒரு MMBTU பயோ-கேஸ் விலை ரூ.2,110 ஆக) திட்டமிடப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு
உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாடு
பயோ-கேஸ் உற்பத்தி நிலையங்களை முதன்மை எரிவாயுக் குழாய் நெட்வொர்க்குகளுடன் இணைக்க நிதி உதவிகள், சிறு தொழில் தொடங்குவோருக்கான பிரத்யேகக் கடன் உத்தரவாத வசதி மற்றும் மாவட்ட அளவிலான தொழில்நுட்ப வளர்ச்சித் திட்டங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே இந்தியாவில் SATAT திட்டம் போன்ற முயற்சிகளின் கீழ் 200க்கும் மேற்பட்ட பயோ-கேஸ் ஆலைகள் இயங்கி வரும் நிலையில், இந்தப் புதிய ஒருங்கிணைந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் 1.5 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.