நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை 2024-ஐ தாக்கல் செய்யவுள்ளார்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மோடி 3.0 அரசின் முதல் பட்ஜெட் மற்றும் நடப்பு 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதனை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறார். இன்று காலை 11 மணிக்கு அவை துவங்கும் போது, அவர் இதனை தாக்கல் செய்வார். இதன்மூலம் தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் முதல் நபர் என்ற பெருமையை பெறுகிறார். இந்த பட்ஜெட்டில், நிதியமைச்சர் வருமான வரி கட்டமைப்பில் மாற்றம் செய்வது தொடர்பான அறிவிப்பு, தொழில் துறையினரை ஊக்குவிக்கும் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் இருப்பதாக அறிக்கை
முன்னதாக நேற்று தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில், பட்ஜெட்டின் முன்னோட்டமாக சென்ற நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையின்படி, இந்திய பொருளாதாரம் சர்வதேச சவால்களையும் மீறி, வலுவான நிலையில் உள்ளது எனத்தெரிவித்தார். இந்தியாவின் GDP (ஒட்டுமொத்த உற்பத்தி) கடந்த 2023-24 நிதி ஆண்டில் 8.2% வளர்ச்சி அடைந்துள்ளது எனக்குறிப்பிட்டார். மேலும், சர்வதேச அளவிலான சராசரி பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதமாக இருந்தது, அதை ஒப்பிடும்போது, இந்திய பொருளாதாரம் மிக சிறப்பாக வளர்ச்சி அடைந்துள்ளது எனக்கூறினார்.
வரி நிவாரணம் குறித்த எதிர்பார்ப்புகள்
5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை நோக்கி இந்தியாவை வழிநடத்தும் நோக்கில் பங்குதாரர்கள் குறிப்பிடத்தக்க அறிவிப்புகளுக்காக காத்திருப்பதால், இந்த ஆண்டின் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. FY25க்கான யூனியன் பட்ஜெட்டில் இருந்து முக்கிய எதிர்பார்ப்புகள், தனிப்பட்ட வரி செலுத்துவோர் மற்றும் சம்பளம் பெறும் தொழில் வல்லுநர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான கணிசமான வரி சீர்திருத்தங்கள், வருமான வரி அடுக்குகளை பகுத்தறிவு செய்தல் மற்றும் பிரிவு 80C இன் கீழ் வரம்புகளை அதிகரிப்பது ஆகியவை அடங்கும். அதேபோல, வேலைவாய்ப்பைத் தூண்டுதல், உள்கட்டமைப்பு மேம்பாட்டை மேம்படுத்துதல், குறிப்பாக விவசாயம், உற்பத்தி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில், உலகளாவிய நிச்சயமற்ற நிலைமைகளுக்கு மத்தியில் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் நடவடிக்கைகளுக்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன.