சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மத்திய அரசுடன் இணைந்து தமிழகத்தில் 'கேலோ இந்தியா' போட்டிகளை நடத்தவுள்ளது. இப்போட்டிகள் வரும் 19ம் தேதி துவங்கி 31ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தமிழ்நாடு மாநிலத்தில் நடந்து வரும் நிலையில், இப்போட்டிக்கு வருகை தரும்படி பிரதமர் மோடியை அழைக்க தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று(ஜன.,3)டெல்லி புறப்பட்டு சென்றார். அதன்படி இன்று(ஜன.,4) மாலை பிரதமர் மோடியை சந்தித்து அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து உதயநிதி திடீரென டெல்லி அக்பர் சாலையில் உள்ள சோனியா காந்தி இல்லத்திற்கு சென்றார். அங்கு இவரை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இணைந்து வரவேற்றுள்ளனர்.
தொகுதி பங்கீடு குறித்தும் விவாதித்ததாக தகவல்
அதன் பின்னர் பரஸ்பர நலன் விசாரித்து கொண்ட பின்னர், அமைச்சர் உதயநிதி அவர்கள் இருவரையும் கேலோ போட்டிக்கு வருகை தரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரஸ்-திமுக கூட்டணி கட்சிகள் இடையே விரைவில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை துவங்கவுள்ளது. இந்நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா அளவிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமான கூட்டணியாக அமைந்துள்ளது. இந்த இரு கட்சிகளின் இடையே உள்ள பந்தம் பலமாக உள்ள நிலையில், டெல்லி சென்றுள்ள உதயநிதி ஸ்டாலின் தொகுதி பங்கீடு தொடர்பாகவும் மேலோட்டமாக விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.